பக்கம் : 643
 

சுயம்பிரபை அம்மகளிரைக் காண்டல்

997.

பொன்னிய லமளி மேலாள் பூவணை மருங்கு தீண்டக்
கன்னியர் கவரிக் கற்றை கைவல னசைப்பக் காய்பொன்
னின்னிசைக் குழைவில் வீச வினிதினங் கிருந்த நங்கை
துன்னிய மகளிர் தம்மைத் தமர்தொழு துணர்த்தக் கண்டாள்.
 

     (இ - ள்.) பொன்னியல் அமளி மேலாள் - பொன்னாலியன்றதொரு படுக்கையின்மேல்
அமர்ந்தவளாய், பூவணை மருங்குதீண்ட - பூக்களால் ஆய அணைகள் தன் பக்கத்தே
பொருந்தச் சிறிது சாய்ந்து, கன்னியர் கவரிக்கற்றைக் கைவலன் அசைப்ப - பணிமகளிர்கள்
கவரிமாவின் மயிர்க்கற்றையாகிய சாமரைகளை வலப்பக்கத்தே நின்று இயக்கவும், காய்
பொன் இன்இசைக் குழைவில் வீச - ஒளிர்தலையுடைய பொன்னாற் செய்யப்பட்ட
காட்சிக்கினிய பொருத்துக்களையுடைய தோடுகள் ஒளியை வீசவும், இனிதின் அங்கிருந்த
நங்கை - இனிதாக அவண் வீற்றிருந்த சுயம்பிரபை, துன்னிய மகளிர்தம்மை - ஆண்டு
வந்துற்ற மகளிர்களை, தமர்தொழுது உணர்த்த - தன் தோழியர்கள் தன்னைத் தொழுது
அவர் வரவைத் தனக்கு அறிவித்தமையால், கண்டாள்-காண்பாளாயினாள், (எ - று.)

இசை - இசைப்பு - பொருத்தல். சுயம்பிரபையின் நெஞ்சகம் திவிட்டன் பாலதாகலின்
‘உணர்த்தக் கண்டாள்’ என்றார்.
 

( 171 )

சுயம்பிரபை புன்முறுவல்

998.

வலங்கொண்டு தொழுது வாழ்த்தி
     மற்றவ ரடைந்த போதி
னுலங்கொண்ட வயிரத் தோளா
     னுழைக்கல மகளி 1ரென்று
நலங்கொண்டோ ரார்வங் கூர
     நகைமுக முறுவ றோன்றிப்
2புலங்கொண்ட ததனைக் காப்பான்
     பூவொன்று நெரித்து மோந்தாள்.
 

     (இ - ள்.) மற்றவர் - அம்மகளிர்கள், வலங்கொண்டு தொழுது வாழ்த்தி
அடைந்தபோதின் - தன்னை வலமாக வந்து வணங்கி வாழ்த்துக்கூறி அவண்
அடைந்தபொழுது, உலங்கொண்ட வயிரத்தோளான் உழைக்கல மகளிர் என்று - இவர்கள்
திரள்கற்போன்ற உறுதியாய தோளையுடைய திவிட்ட நம்பியின் உழைக்கல மகளிர்கள்
ஆவர் என்று கருதுவதனாலே, நலம்கொண்டு ஓர் ஆர்வம்கூர - அந்நலத்தைப்
பற்றுக்கோடாகக்கொண்டு ஒரு விருப்பம் தோன்றிற்றாக, நகைமுகம் முறுவல்

 

     (பாடம்) 1. ரென்னு. 2. பொலங்.