பக்கம் : 645
 

      பஞ்சாலியன்ற விளக்கமுடைய அமளிமிசை வீற்றிருந்தவள், ஒளி பரந்து திருவில் வீச
- அணிகலன் முதலியவற்றின் பல்வேறுவகை ஒளிகள் பரவி இந்திர வில்லிட, மஞ்சு இலங்கு
உருவ வானின் மழையிடை - வெண்முகில்கள் விளங்குகின்ற அழகிய விசும்பின் கண்ணே
கருமுகில்களின் ஊடே, நுடங்கும் மின்போல் - துவள்கின்ற மின்னற்கொடியைப் போன்று
தோன்றி, அஞ்சிலம்பு அடியினார் தம் - அழகிய சிலம்புகளையணிந்த அடிகளையுடைய
அம்மகளிருடைய, அறிவினை அயர்வித்திட்டாள் - அறிவு மயங்கும்படி செய்தாள், (எ - று.)

மஞ்சு - வெண்மேகம் : இது பஞ்சணைக்குவமை. திருவில் - இந்திரவில். மழையிடை
மின்னென்றார்; கூந்தலிடைத் தோன்றும் சுயம்பிரபை திருமேனியை. தெய்வப் பாவை,
வில்வீச, மழையிடை நுடங்கு மின்போல், அம்மகளிர் அறிவினை அயர்வித்திட்டாள் என்க.
 

( 174 )

மாதவசேனை என்பாள்,
சுயம்பிரபையின் உருவத்தை ஓவியந் தீட்டல்
1001.

மற்றவர் காணும் போழ்தின் மாதவ சேனை யென்பாள்
சுற்றிய பளிங்கிற் சோதிச் சுவர்மிசை 1யன்னா டோன்ற
இற்றிவ ளுருவ மென்றாங் கிதயத்து ளெழுதி வைத்துப்
பிற்றையோர் பலகை தன்மேற் பெய்வளை யெழுத லுற்றாள்.
 

     (இ - ள்.) மற்றவர் காணும்போழ்தின் - அம்மகளிர்கள் அவ்வண்ணம்
சுயம்பிரபையைப் பார்க்கும் அமயத்தில், சுற்றிய சோதி பளிங்குச் சுவர்மிசை - சூழ்ந்துள்ள
ஒளிமிக்க பளிங்குச் சுவரின்மேல், அன்னாள் தோன்ற - அச்சுயம்பிரபையின் உருவம்
தோன்றிற்றாக, மாதவசேனை என்பாள் - மாதவசேனை என்னும் அத்தவமகள்
அந்நிழலுருவைப் பார்த்து, இற்று இவள் உருவம் என்றாங்கு - இத்தன்மைத்து இவளுடைய
உருவத்தின் அழகு என்று ஊன்றி எண்ணி, அவ்விடத்தே, இதயத்துள் எழுதிவைத்து - தன்
உள்ளமாகிய கிழியிலே அவள் உருவமாகிய ஓவியத்தைத் தீட்டிவைத்து, பிற்றை ஓர் பலகை
தன் மேல் - பின்னர் ஒரு பலகையின்மேல், பெய்வளை எழுதலுற்றாள் - அம்மாதவ
சேனை, சுயம்பிரபையின் உருவ ஓவியத்தைப் பொறிக்கத் தொடங்கினாள், (எ - று.)

பெய்வளை - மாதவசேனை, மகளிர்கள் நங்கையை இவ்வாறு காணும் பொழுது
மாதவசேனை, சுயம்பிரபையின் சோதியால் அவளை நேரிற் காணமாட்டாதவளாய்,
அயலிலுள்ள பளிங்குச் சுவரில் அவள் உருவம் சிறிது ஒளிகுன்றித் தோன்றலைக் கண்டவள்,
அவ்வுருவினை முன்னர்த் தன் உள்ளக்கிழியில் எழுதிக்கொண்டு, பின்னர்ப் பலகையிலே
எழுதத் தொடங்கினாள், என்க.
 

( 175 )

     (பாடம்) 1. யெரித்துத் தோன்ற.