பக்கம் : 649 | | மாதவ சேனை சுயம்பிரபையின் ஓவியத்தைப் பலகையில் வரைந்து, பட்டுறையின்மூடி, எடுத்துக் கொண்டு சசிதேவியின்பாற் சென்றாள் என்க. | (180) | | 1007. | மையகத் தலர்ந்த வாட்கண் மாதவ சேனை சென்று வையகத் தரசன் றேவி மலரடி வணங்க லோடு மெய்யகத் துவகை கூர விரும்பித்தன் னருகு கூவிக் கையகத் 1ததுவென் னென்னக் கன்னிய துருவ மென்றாள். | (இ - ள்.) மை அகத்து அலர்ந்த வாள்கண் மாதவசேனை சென்று - மை தீட்டப்பெற்ற உள்ளகத்தையுடைய அகன்ற வாள்போன்ற கண்களையுடை மாதவசேனை என்பவள் போய், வையகத்து அரசன்தேவி - பயாபதி மன்னன் மனைவியாகிய சசிதேவியினுடைய, மலரடி வணங்கலோடும் - மலர் போன்ற திருவடிகளை வணங்கியவுடனே, மெய்யகத்து உவகைகூர - அச் சசிதேவி, தன் உடலில் உவகையின் மெய்ப்பாடு மிக்குத்தோன்றும வண்ணம், விரும்பி தன் அருகுகூவி - மாதவசேனையை மிகவும் ஆர்வஞ்செய்து தன் அண்மையிலே அழைத்து, கையகத்தது என் என்ன? - மாதவசேனாய் நின் கையின்கண் கொண்டுள்ள பொருள் என்னையோ என்று வினவ, கன்னியது உருவம் என்றாள் - அடிகளே இது சுயம்பிரபையின் உருவந்தீட்டிய ஓவியப்பலகை என்று மாதவசேனை இறுத்தாள், (எ - று.) ஓவியத்தோடே சென்று, மாதவசேனை சசியை வணங்க, அத்தேவி, ‘நின் கையகத்த தென்னை?’ என்ன “இது கன்னியின் ஓவிய உருவம் ' என்றாள், என்க. | ( 181 ) | | 1008. | அணிகலம் பரிந்து நங்கை யணிமரு ளுருவந் தந்த 2மணிமருண் முறுவற் செவ்வாய் மாதவ சேனைக் கீந்து பணிவரும் பலகை தன்மேற் பாவையைக் காண்டு மென்றாள் துணிவரும் பவழத் 3துண்டந் துடிக்கின்ற தனைய வாயாள். | (இ - ள்.) துணிவரும் பவழத்துண்டம் துடிக்கின்றது அனைய வாயாள் - துண்டாகத் தறிக்கப்பட்ட பவழத்தினது துணுக்குகள் துடித்தால் ஒத்தசைகின்ற அதரங்களையுடைய சசிதேவி, நங்கை-சுயம்பிரபையினுடைய, அணிமருள் உருவந்தந்த - அழகே மருளுதற்குக் காரணமான உருவக்கிழியைக் கொணர்ந்து தந்த, மணிமருள் முறுவற் செவ்வாய் - முத்தும் பவளமும் நிரலே மருளுதற்குக் காரணமான பற்களையும் சிவந்த வாயையுமுடைய, மாதவசேனைக்கு - மாதவசேனை என்பவளுக்கு, அணிகலம் ஈந்து - உயரிய அணிகலன்களைப் பரிசிலாக அளித்து, பரிந்து - பரிவுகொண்டு, பணிவரும் பலகை தன்மேல் - தொழில் நுணுக்கமுடைய இப்பளிங்குப் பலகையிற்றீட்டப்பட்ட, பாவையைக் காண்டும் என்றாள் - சுயம்பிரபையின் ஓவியத்தை யாம் காண்பாம்என்று கூறினாள், (எ - று.) | |
| (பாடம்) 1. திதுவென். 2. மணி மருளுருவச். 3. தண்டம். | | |
|
|