விசயன் எவ்வாறிருப்பான் என்பதை இச் செய்யுளில் கூறுகிறார். வலம்புரிச் சங்கைப் போன்ற வெள்ளிய உடலையுடையவன்; தாமரையின் அகவிதழைப் போன்ற கண்; இருள் திரண்டாற்போன்ற குஞ்சியையுடையவன்; தூ - தூய. தூய இருள் என்றது, ஒளிக் கலப்பற்றுச் செறிந்த இருள் என்றவாறு. நல்ல இருள் என்பது உலக வழக்கு. அழகிய குண்டலங்கள் அசைகின்ற காதுகளையுடையவன். வலம்புரி - வலப்பக்கமாகச் சுழிந்துள்ள சங்கு. அகவிதழ் அழகிலும் மென்மையிலும் சிறந்ததாகலின் உவமைக்கு அதனையெடுத்தார். அகவிதழ் தடுத்த - அகவிதழின் தன்மை முழுவதையும் புறத்தே செல்லவிடாது தடுத்துத் தன்னிடத்தே அடக்கிக்கொண்ட. தூம் மருள் - என்பதனை தூமம் என்பதன் இடைக் குறையாகக்கொண்டு புகையை ஒத்த இருள் என்று பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறுதல் உவமைக் குவமையாயிருக்கும். |
( 6 ) |
மாலை, மார்பு, கை, நிறம், தோள், நடை ஆகியன |
76. | வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன் 1தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன் கோடுயர் குன்றெனக் 2குலவு தோளினன் பீடுடை நடையினன் பெரிய நம்பியே. |
(இ - ள்.) வாடல் இல் கண்ணியன் - வாடுதல் இல்லாத மாலையை அணிந்தவன்; மலர்ந்த மார்பினன் - விரிந்த மார்பையுடையவன்; தாள் தவழ் தடக்கையன் - முழங்கால் அளவும் நீண்டு விளங்கும் பெரிய கையை உடையவன்; தயங்கு சோதியன் - விளங்குகின்ற உடல் ஒளியை உடையவன்; கோடுஉயர் குன்று என - உயர்ந்த உச்சியினையுடைய குன்று போல; குலவு தோளினன் - விளங்குகின்ற தோள்களையுடையவன்; பீடு உடை நடையினன் - சிங்கவேற்றின் பெருமித நடையைப்போலும் நடையை உடையவன்; பெரிய நம்பி - பெரியவனான விசயன். (எ - று.) இச் செய்யுளும் விசயனைப்பற்றியே கூறுகின்றது. வாடலில் கண்ணியன் என்றமையின் விசயனுடைய தெய்வத்தன்மை விளங்குகின்றது. கைகள் நீண்டிருத்தல் ஆடவர்கட்கு நல்லியல்பாகும். தோளுக்குக் குன்று உவமை. நம்பி - ஆடவரிற் சிறந்தவன்; குவவுத் தோளினன் என்னும் பாடத்திற்குப் பருத்த தோள்களையுடையவன் என்று பொருள் கொள்க. |
( 7 ) |
|
(பாடம்) 1. தாள் தவிழ், 2. குவவுத் தோளினன். |