(இ - ள்.) மணி தெளித்து அமைக்கப்பட்ட வண்ணமே வண்ணமாக - ஒன்பது வகையாகிய மணிகளின் பல்வேறு வகையாய நிறங்களை ஆராய்ந்து தெளிந்து அம்மணிகளின் நிறங்களே அவ்வோவியத்திற்கும் நிறமாக அமையுமாறு, துணியமுன் கலந்து - பொருந்துமாற்றால் வண்ணங்களை முன்னர்க் கூட்டிக்கொண்டு, செய்த துகிலிகைத் தொழில்கள் நோக்கி - செய்யப்பட்ட தூரியக்கோல்களின் நுணுகிய தொழிற்றிறங்களை ஆராய்ந்து உணர்ந்து, கணிநலம் கருதலாகா இக்கண்கவர் சோதி - ஆராய்ச்சிவன்மையாகிய நலத்தால் ஆராய்ந்து காண்டற்கரிதாகிய கண்ணைக் கவர்கின்ற இவ்வொளிப் பிழம்புதான், அணியினது ஒளிகளோ - சுயம்பிரபையின் அணிகலன்களால் ஆய ஒளிகளோ அல்லது, அணங்கினது உருவமோ - சுயம்பிரபையின் திருமேனியின் இயற்கை யொளியோ, என்றாள் என்று வியந்தாள், (எ - று.) மணிகளின் ஒளிபோன்ற வண்ணந்தீட்டப் பெற்ற சோதி மிக்க அவ்வோவிய வுருவைக் கண்ட தேவி, வியந்து இவ் வொளி, நங்கைக்கு அணிகளானியன்ற வொளியோ அவள் மேனியின் இயற்கை ஒளியோ! என்று, வியந்தாள் என்க. |