பக்கம் : 653
 

     (இ - ள்.) போது அவிழ் அலரி நாறும் - இதழ்கள் விரிந்த மலர்மணங் கமழும், புரி
குழல் - பின்னுதலையுடைய அளகத்தையுடைய, உருவப் பாவை - அழகிய சுயம்பிரபையின்,
சோதி சூழ் வடிவு - ஒளிமொய்க்கின்ற ஓவிய உருவத்தை, நம்பி சுடர்மணி வண்ணன் காண
- நம்பியாகிய ஒளியுடைய மரகத மணிபோன்ற வண்ணமுடைய திவிட்டன் காணுமாறு,
மாதவசேனை - ஓ மாதவசேனாய்!, காட்டவல்லையோ?- நீ அவனுக்குக் காட்ட
மாட்டுவையோ? என்ன - என்று சசிதேவி வினவ, அடிகள் - அடிகளே!, யாம் உருவம்
உணரின் அன்றே - யாம் சுயம்பிரபையின் உருவச் சிறப்பை நன்கு உணர்ந்தாலன்றோ,
ஐயற்கு ஓதுவது என்றாள் - திவிட்டநம்பிக்கு அவள் உருவங்காட்டி ஓதவல்லோம் ஆவோம்
என்று மாதவசேனை உரைத்தாள், (எ - று.)

இத்திருவுருவப் படத்தை ஐயற்குக் காட்டுமாற்றால் சுயம்பிரபையின் எழில் முற்றும் அவன்
உணர்த்தப்பட்டவன் ஆகான். எடுத்தியம்பற்கும் யாமும் நன்கு உணர்ந்தோமில்லை;
ஆயினும் இதனை நம்பிக்கு யான் காட்டுவல் என்றாள், என்க. “ஆயினும் நம்பிக்கிதனைக்
காட்டுவல்Ó என்பது குறிப்பெச்சம்.
 

( 187 )

மாதவசேனை, அவ் வோவியத்துடன்
திவிட்டன்பாற் சேறல்.
1014.

மற்றவ டொழுது போகி மணிவண்ணன் மகிழ்ந்த கோயிற்
1சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்மணி வாயி னண்ணி
இற்றென விசைத்துப் புக்காங் கிளையவன் கழல்கை கூப்ப
வெற்றுநீ வந்த தென்றாற் கிதுவெனா வெடுத்துச் சொன்னாள்.
 

     (இ - ள்.) மற்றவள் தொழுது போகி - அம்மாதவசேனை என்பாள் சசிதேவியை
வணங்கி அவணின்றும் சென்று, சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர்மணி - தன்னைச்
சூழ்ந்து ஒளிக்கற்றைகள் பொருந்தி விளங்கும் செவ்விய பொன்னாலியன்ற ஒளிரும் மணிகள்
பொருந்தியதும், மணிவண்ணன் மகிழ்ந்த - திவிட்டனால் விரும்பி உறையப்பட்டதும் ஆகிய,
கோயில் வாயில் நண்ணி - அரண்மனை வாயிலை அடைந்து, இற்றென இசைத்துப்புக்கு -
தான் வந்த காரியம் இத்தன்மைத்தென்று வாயில் காவலருக்குக் கூறி அரண்மனையின்
உள்ளே சென்று, ஆங்கு இளையவன் கழல் கைகூப்ப - அவ்விடத்தே திவிட்டநம்பியைக்
கண்டு அவன் அடிகளை வணங்கினாளாக, எற்று நீ வந்ததென்றாற்கு - மாதவசேனையே நீ
வந்த காரியம் யாதென வினவிய திவிட்டநம்பிக்கு, இது எனா எடுத்துச் சொன்னாள் -
மாதவசேனையான் வந்த காரியம் இஃதென்று எடுத்துக்கூறத் தொடங்கினாள், (எ - று.)
 


     (பாடம்) 1. சுற்று நின்.