பக்கம் : 655
 

     (இ - ள்.) அரச நம்பி - திவிட்டன், அப்படித்தாயிற் காண்பாம் என்றனன் -
அத்தகைய அருங்கலம் உளதாயில் அதனை யான் பார்ப்பேன் என்று கூறினானாக,
மைப்புடை நெடுங்கணாளும் - மையூட்டப்பட்ட பக்கங்களையுடைய நீண்ட கண்களையுடைய
மாதவசேனையும் உடனே, மருங்கு நின்றவரை நீக்கி - பக்கத்தே நின்றவர்களை அகலப்
போமாறு செய்து, கைப்புடைப் பலகை மேலாற் கன்னியது உருவம் காட்ட - தன் கையகத்
ததாகிய பளிக்குப் பலகைமேல் வரையப்பட்ட சுயம்பிரபையின் ஓவிய உருவத்தைத்
திவிட்டனுக்குக் காட்டாநிற்ப, மெய்ப்புடை தெரிய மாட்டான் - இது சுயம்பிரபையின்
உருவம் என்னும் மெய்ப் பகுதியை அறியமாட்டாதவனாய், விருந்துகொள் மனத்தன்
ஆனான் - மருட்கை யென்னும் மெய்ப்பாடு கொண்ட மனத்தையுடையவன் ஆனான், (எ -
று.)

புதுமை பெருமை சிறுமை ஆக்கம் என்னும் நான்கும் நிலைக்களனாகத் தோன்றும்
மருட்கையாகலின் ஈண்டுப் புதுமைபற்றிப் பிறந்த மருட்கையை, விருந்தென்று கூறினார்.
 

( 190 )

திவிட்டன் மாதவசேனையை வினாதலும்
அவள் கூறுதலும்
1017.

வானவர் மகள்கொல் விஞ்சை1 மாதுகொன் மண்ணுளாள்கொல்
தேனிவர் குழலி திருநுதன் மடந்தை யென்ன
மானிவர் நோக்கி 2விண்ணோர் மகளல்லண் மற்று நின்ற
ஊனிவ ரலங்கல் வேலோ யுய்த்துணர்ந் தருளு கென்றாள்.
 

     (இ - ள்.) தேன் இவர் குழலி - வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய
மாதவசேனாய் !, மற்றித்திருநுதல் மடந்தை - இந்த அழகிய நெற்றியையுடைய மகள்,
வானவர் மகள் கொல் விஞ்சைமாது கொல் மண் உளாள்கொல் - தேவ மகளோ?
அல்லளாயின் விச்சாதர மகளோ? அல்லளாயின் இம்மண்ணுலக மகள் தானோ? இயம்புதி
என்று வினவ, மானிவர் நோக்கி - மான்கள் விரும்பி வருதற்குக் காரணமான
நோக்கினையுடைய - மாதவசேனையும், ஊன் இவர் அலங்கல் வேலோய் - ஊனை
விரும்புகின்ற வெற்றிமாலை சூட்டப்பெற்ற வேற்படையை உடையோனே இவள், விண்ணோர்
மகள் அல்லள் - தேவமகள் அல்லள், மற்று நின்ற - எஞ்சி நின்றவர்களில் இவள் எம்மகள்
என, உய்த்துணர்ந்து அருளுகென்றாள்-உற்றுநோக்கி ஆராய்ந்து உணர்க என்று கூறினாள்,
(எ-று,)

எஞ்சி நின்ற - வானவர்கள் அன்றி எஞ்சிநின்றனவாகிய விஞ்சை மகள் மண்மகள்
என்பனவற்றுள் என்க. மகளிரின் உருவங்கள் என்பாள் நின்ற என்ற அஃறிணைப்
பன்மையாற் கூறினாள்.
 

( 191 )

     (பாடம்) 1. விஞ்சைப் பாவை. 2. யன்னோர்.