பக்கம் : 656
 

திவிட்டன் இது சுயம்பிரபையின் உருவம் போலும் எனக் கருதல்

1018.

மண்மிசை மகளி ரின்ன வடிவுடை யவர்க ளில்லை
விண்மிசை மடந்தை யல்ல ளாய்விடின் விஞ்சை வேந்தன்
கண்மிசை நவிலுங் காதற் கன்னிய துருவ மாமென்
றெண்மிசை யிவரும் போழ்தி னிதுவென வவளுஞ் சொன்னாள்.
 

     (இ - ள்.) மண்மிசை மகளிர் இன்ன வடிவுடையவர்கள் இல்லை - இம்
மண்ணுலகத்தே வாழும் மானிடமகளிர்களில் இத்தகைய சிறப்புடைய உருவம் உடையார்
யாரும் இலர், விண் மிசை மடந்தை யல்லள் ஆய் விடின் - மற்று நீ கூறியாங்கு இவள்
தேவமகளும் இல்லை என்னின், விஞ்சை வேந்தன் - சடிமன்னன், கண் மிசை நவிலும் -
தன் கண்ணினும் சிறந்தவளாகக் கருதுகின்ற, காதற் கன்னியது உருவம் ஆம் என்று - காதல்
மிக்க சுயம்பிரபையின் உருவமே ஆதல் வேண்டும் என்று, எண்மிசை இவரும் போழ்தின் -
தனது ஆராய்ச்சிமேல் கருதும் பொழுது, இது என அவளும் சொன்னாள் - அக்கருத்தைக்
குறிப்பான் அறிந்த மாதவசேனையும் அவ்வுருவமே இஃது என்று கூறினாள், (எ - று.)

வானவர் மகள் அல்லள் பின் இவள் யார் என்றாட்கு மண் மகள் அல்லள் இவள்
விஞ்சைமகளே போலும் என்று கருத, மாதவசேனை அது என்றாள் என்க.
 

( 192 )

 

1019.

கன்னிய துருவங் காளை காண்டலுங் 1கேடில் காமன்
பொன்னியல் கழலன் றாரன் 2பூட்டிய சிலைய னாகி
மன்னிய விற்கை நோக்கி மலரணி கணையு நோக்கித்
துன்னிய பொழுது 3நோக்கிச் சுடுசரந் 4தொடுக்க லுற்றான்.
 

     (இ - ள்.) கன்னியது உருவம் காளை காண்டலும் - சுயம்பிரபையின் திருவுருவத்தைத்
திவிட்டன் இவ்வாறு கண்டவுடனே, கேடு இல் காமன் - தன் தொழிலிற் கெடுதலில்லாது
வெற்றியே கொள்ளும் காமவேள் என்பான், பொன்னியல் கழலன் - பொன்னாலியன்ற
வீரக்கழல்களைக் கட்டியவனாய், தாரன் - மாலையை அணிந்தவனாய், பூட்டிய சிலையன்
ஆகி - நாண் ஏற்றிய வில்லையுடையவனாய்ப் போர்க்கோலம் பூண்டு, கை மன்னிய வில்
நோக்கி - தன் கையின்கட் பொருந்திய கரும்பு வில்லையும் நன்கு பார்த்து,
அணிமலர்க்கணையும் நோக்கி - அழகிய மலரம்புகளையும் நன்கு பார்த்து, துன்னிய
பொழுதும் நோக்கி - தன் செயலுக்கு ஏற்றதாய்ப் பொருந்தியுள்ள காலத்தையும் நன்கு
பார்த்து, சுடுசரம் தொடுக்கலுற்றான் - (சீர்த்தவிடமாதல் கண்டு கொக்கின் குத்தொக்க
விரைந்து) சுடுகின்ற அம்புகளை வில்லிற் றொடுத்து ஏவினான், (எ - று.)

 

     (பாடம்) 1. கேட்ட. 2. பூமுடி. 3. நோக்கா. 4. துரக்க.