திவிட்டனுடைய உடல் முதலியன |
77. | பூவையம் புதுமலர் புரையு மேனியன் தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன்; தீவிரி யாம்பலிற் 1சிவந்த வாயினன், 2மாவிரி திருமறு வணிந்த மார்பினன். |
(இ - ள்.) பூவை அம் புதுமலர் புரையும் மேனியன் - காயாவின் அழகிய புதுமலர்போன்ற நிறத்துடன் விளங்கும் உடலையுடையவன்; தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன் - தூய்மைமிக்க தாமரை மலர்களை வென்ற கண்களை யுடையவன்; தீவிரி ஆம்பலின் சிவந்த வாயினன் - நெருப்பு நிறமாக மலர்ந்த செவ்வல்லி போன்ற சிவந்த வாயை உடையவன்; மாவிரிதிருமறு அணிந்த மார்பினன் - அழகுபொருந்திய திருமகளாகிய மறுவையுடைய மார்பையுடையவன். (எ - று.) இச்செய்யுளும் அடுத்த செய்யுளும் திவிட்டனுடைய தன்மைகளை இயம்புகின்றன. திவிட்டன் காயாம்பூ நிறத்தினன்; தாமரை மலர் போன்ற கண்ணினன்; செவ்வல்லிபோன்ற சிவந்த வாயையுடையவன்; திருமகள் தங்கப்பெற்ற மார்புடையவன். திவிட்டன் திருமாலின் கூறாகத் தோன்றியவனாகலின் இவ்வாறு எடுத்துரைக்கப் பெற்றான். பூவை - காயா. புரையும்: உவம உருபு. தொலைத்தல் - ஈண்டு வெல்லுதல். மறு - பிறந்தபோதே உடம்பில் தோன்றும் நிறம் வேறுபட்டதோர் அறிகுறி. இதனை ‘மச்சம்‘ என்பர். இவைகட்கு எழுவாய் வருஞ் செய்யுளில் உள்ள இளைய நம்பி என்பது. |
( 8 ) |
கை முதலியன |
78. | 3சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை தங்கிய வங்கைய னடித்தண் போதினன் மங்கல மழகளி றனைய 4செல்கையன் இங்குமுன் மொழிந்தவற் கிளைய நம்பியே. |
(இ - ள்.) இயல் வலம்புரிச்சங்கு - அழகிய வலம்புரிச் சங்கும்; திகிரி - சக்கரமும்; என்று இவை தங்கிய அம் கையன் - என்று சொல்லப்பெற்ற இவைகள் (இரேகைகளாகத்) தங்கப் பெற்ற அழகிய கைகளையுடையவன்; அடித்தண் போதினன் -குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற அடிகளையுடையவன்; |
|
(பாடம்) 1. சிறந்த, 2. மாவிருந் திருமறு, 3. செங்கயல், 4. செங்கையில். |