(இ - ள்.) வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னும் - வெவ்விய ஒளியான் நிறைந்த நீலநிறமான விண் என்னும், மணிகொள் பொய்கை - அழகிய குளத்தின்கண்ணே, செய்யொளிச் செக்கர் என்னும் - சிவந்த ஒளியுடைய செக்கர் வானம் என்னும் செம்புனல் பரந்து தேறி - செவ்விய புதுப்புனல் பரவித் தெளிந்திட, மையிருள் என்னும் சேற்றில் - அப்பொய்கைக்கண் உள்ள கரிய இருள் ஆகிய சேற்றின்கண்ணே வளர்திங்கட்கதிர்கள் என்னும் - வளர்தலையுடைய திங்கள் மண்டிலத்தின் சுடர்களாகிய, மொய் இளம் கமல நாளம் வளையங்கள் முளைத்த அன்றே - செறிந்த இளமையுடைய தாமரையின் தாள்களையுடைய சுருள்கள் முளைப்பனவாயின அன்றே: அசை, (எ - று.) தாமரை வளையம் - தாமரை யிலைகளின் சுருண்ட தளிர்கள் - அவை வெண்ணிறமுடையன வாகலின் நிலாவொளிக் கற்றைக்கு உவமை கூறினார். |
(இ - ள்.) அங்கு ஒளி விசும்பிற்றோன்றி அந்திவான் அகட்டுக்கொண்ட - அவ்விடத்தே ஒளியுடைய விசும்பின் கண்ணே தோன்றிச் செக்கர் வானத்தின் இடையே இருத்தலைக் கொண்டுள்ள, அங்குழவித் திங்கள் - அழகிய இளைதாகிய பிறையினது, பாலவாய் தீம் கதிர்முறுவல நோக்கி - பால்போலும் நிலபுடைய வாயிற்றோன்றும் இனிய வொளியாகிய புன்முறுவலைக் கண்டு, ஆம்பல் தங்கு ஒளிவிரிந்த - ஆம்பல்மலர்கள் தம்மிடத்தே தங்கிய ஒளியை விரித்தன, தாமரை குவிந்த - தாமரை மலர்கள் கூம்பின, ஒருவராய் உலகுக்கெல்லாம் இனிய நீரார் எங்குளர் - ஒருவராக இவ்வுலகம் முழுதிற்கும் இனிமையே செய்யும் தன்மையுடையார் யாண்டுளர்? (இல்லை என்றபடி.) ஒரு சாரார்க்கு இனிமை செய்யின் மற்றொரு சாரார்க்கு இன்னலாய் முடிதலின், உலகின் அனைவருக்கும் இனிமையே செய்தல் யார்க்கும் இயல்வதன்று என்பதாம். |