இதுமுதல் 3 செய்யுள்கள் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி இடைமடக்கி வந்தன (இ - ள்.) வாமன் - அருகக்கடவுளின், அணங்கு இவர் சேவடியின் - அழகு படர்ந்த செய்ய திருவடிகளைச் சேர்ந்தமையால், அழகெழில் ஏர்ஓர் ஒளிபருகி - அவ்வடிமலரின் அழகாகிய வனப்பின் எழுச்சியில் ஒரு சிறு ஒளியைத் தான் உட்கொண்டு, மணங்கமழும் தாமரை - மணங்கமழ்கின்ற தாமரைமலர், இன்மதுத் திவலை கொப்பளித்து - இனிய தேன் துளிகளைக் கொப்பளித்து, மதர்த்து -(செழிப்புறுதல் என்னும்) செருக்குற்று, அலரும்போலும் - மலராநிற்கும், அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளிபருகி அலரும் ஆயின் - அருகபரமனுடைய அழகு படர்கின்ற செய்ய திருவடிகளின் அழகாகிய வனப்பின் எழுச்சியில் ஒரு ஒளியைப் பருகிய துணையானே மதர்த்து அலருவதுளதாயின், வணங்கினவர் - அவ்வருகனுடைய திருவடிகளை அன்புடனே வணங்கிய அடியார்கள், ஒளிவிரிந்து - பேரொளி பரப்பி, களிசிறந்து - இன்பமிக்கு, மதிமகிழல் - உள்ளம் மகிழ்ச்சியுடையராதல், மருளோ மருட்கைத்தோ? இல்லை என்றபடி ; அன்றே அசை, (எ - று,) மருட்கைத்தோ - வியத்தற்குரியதோ. போலும் - ஒப்பில்போலி. தாமரை வாமன் சேவடியின் அழகில் ஒருசிறிதே பருகி, அந்நன்மையால், கொப்பளித்து மதர்த்து மலரும் ; அஃதங்ஙனமாயின், அவ்வடியினை அன்போடு வணங்கியவர், ஒளிவிரிந்து, களிசிறந்து, மகிழல் வியப்பன்றே என்றாள், என்க. மருளோ என்னும் வினா எதிர்மறை ; இயல்பே ஆகும் என்பது கருத்து. |