(இ - ள்.) முல்லையின் முருகு கொப்புளித்து - முல்லை மலரின்கண் உள்ள தேனைக் கொப்புளித்து, மூரல்வாய் மல்லிகை யிணர்த்துணர் மயக்கும் - புன்முறுவலையுடைய வாயவாகிய மல்லிகைப் பூங்கொத்துக்களிலே பொருந்தும்; மாருதத்து எல்லியும் - தென்றலையுடைய இரவும், இளம்பிறைக் கதிரும் - இளமைத்தாகிய பிறையினது நிலவொளியும், மெல்லியல்வர்களை - காமநோயான் மெலிந்தவர்களை, மெலிவு செய்ய என்ப - மேலும் மெலியும்படி வருத்துவன என்று அறிஞர் கூறுவார்கள்; ஏயும் ஆலும் அசைகள். மயக்கும் - மயங்கும்; வலித்தல் விகாரம், (எ - று.) பிரிவாற்றாமையான் மெலிந்தோரை நலிவன தென்றலும் பிறையும் என்ப என்றாள் என்க. கூடிய வழி இவை அவர்க்கு ஆக்கம் செய்வனவாம் என்பது அவள் கருத்து. |
(இ - ள்.) விரைசெறி புரிகுழல் - மணம் நிறைந்த பின்னலையுடைய அளகத்தையும், வேல்கண் நங்கைதன் - வேல் போன்ற கண்களையுமுடைய சுயம்பிரபையின், புரைசெறி கடிவினை - மாண்புமிக்க திருமணவினை, நாளைப்போழ்து என - நாளையே நிகழ்வதாம் என்று, முரசு எறி இமிழ் இசை முழங்க - முரசத்தை எறிதலாலே எழுந்த ஒலி முழங்குதலை, உரைசெறி மறுகில் கேட்டனன் - பேச்சொலிமிக்க வீதியினிடத்தே யான் கேட்டேன், என்று ஒருத்தி கூறினாள் - என்று ஒரு தோழி இயம்பினாள், (எ - று.) இவள் மொழிகள் நங்கையுளத்தைக் குளிர்வித்திருக்கும் என்பதில் ஐயம் இன்று. உரை செறி மறுகு என்றாள் - யாரும் இம்மணவினையைப் பற்றியே பேசுகின்ற தெருவென்றற்கு; எனவே, மணவினை நாளையே எனப் பேசக்கேட்டலே யன்றி, முரசெறி இசையும் முழங்கக் கேட்டுளேன் என்றாள், என்க. |