பக்கம் : 677
 

     (இ - ள்.) நாளை நாள் என்பது நனித்தும் சேய்த்தென - நாளையாகிற நாள் என்று
சொல்லப்படுவது மிகவும் சேய்மைத்தாமே என்று ஒருத்திகூற, வாளையாம் நெடுங்கணீர்!
மயங்கி என்னை - மற்றொருத்தி வாள்போலும் நெடிய கண்களையுடைய தோழியீர் நீயிர்
நாளைநாள் நனி சேய்த்தென மயங்குதலாற் போந்தபயன் என்னை, இக்கோளை - இந்த
உட்கோளை, விசும்பிடை ஆம்குளிர் வெண்டிங்களார் - விசும்பின் கண்ணதாகிய குளிர்ந்த
வெண்ணிலாவையுடைய திங்கட் கடவுளை, யாம் தாளை வணங்குபு தாழ்ந்து கேட்டும் ஏ -
யாம் ஒன்றுகூடி அவர்தம் அடிகளை வணங்கி அவர்முன் தாழ்ந்து கேட்போமாக, (என்றாள்)
(எ - று.)

உட்கோள் - நாளைநாள் நனி சேய்த்தென்னும் கொள்கை, திங்களார் நம்
வேண்டுகோட்கிரங்கி விரைந்து இயங்குவரேல் நாளைநாள் நனி அண்மைத்தாம் ஆதலின்
தாழ்ந்து, கேட்டும் என்றாள் என்க. வாளைமீன்போன்ற கண்ணுமாம். ஐ: சாரியை எனினுமாம்.
 

( 227 )

 

1054.

காமனுங் கணைப்பயன் கொண்டு கண்களால்
1நாமுநன் னல்வினை நுகரு நாளவாய்
யாமமிங் கொருங்குட னகல வென்றுபோய்
வாமன்ற னகருழை வரங்கொள் வாங்கொலோ.
 

     (இ - ள்.) காமனும் கணைப்பயன்கொண்டு - காமவேளும் தான் ஏவுகின்ற
மலர்வாளியானாய பயனை எய்தவும், நாமும் நல்நல்வினை கண்களால் நுகரும் - தோழியீர்
யாம் செய்த மிக்க நல்லறங்களின் பயனை நம் கண்களாலே நுகர்தற்கும் உரித்தாயுள,
நாள்அவாய் - அந்நாளை யாம் விரும்பி, வாமன்றன் நகருழைப் போய் -
அருகபரமனாருடைய திருக்கோயிலினுட் சென்று, யாமம் இங்கு ஒருங்குடன் அகல என்று -
ஒன்றன்பின் ஒன்றாய் மெல்லக் கழியும் இயல்புடைய இவ்விரவின்கண் உள்ள
யாமம் அனைத்தும் ஒன்றுபட்டு விரைந்து ஒன்றாய்க் கழிவதாக அருள்செய்ய வேண்டும்
என்று, வரங்கொள்வாம் கொல் - வரம்தரவேண்டிக்கொள்வோம் என்று ஒருத்தி கூறினாள்.
கொல் ஓ இரண்டும் அசைகள், (எ - று.)

மன்மதன் தன் தொழிலில் வெற்றிகோடல் இருவரும் கூடுதலே யாதலின், காமனும்
கணைப்பயன் கொள்ள என்றாள். கணைப்பயன் - வெற்றி. யாமம் ஒருங்குடன் கழிய என்றது
- ஒன்றன்பின் ஒன்றாய்க் கழியாதே ஒருசேரக் கழிய என்றபடி. இறைவன் எல்லாம்
வல்லனாகலின் - இவ்வாறு செய்வன் என்றாள், எனவே திங்களாரை வேண்டுவம்,
என்றாளை மறுத்தவாறாயிற்று.
 

( 228 )

     (பாடம்) 1. நாமுனன்.