பக்கம் : 678
 

 

1055.

இன்னன நகைமொழி யின்பக் கோட்டியோ
டன்னமென் னடையவ ளமர வாயிடை
மன்னவற் 1கேழிசைத் தெழுந்த தூரியங்
கன்னியுங் கடிகம ழமளி யேறினாள்.
 

     (இ - ள்.) இன்னன - இவை போல்வன, நகைமொழி - நகைச்சுவை பொருந்திய
மொழிகளை இயம்பும், இன்பக் கோட்டியோடு - இன்பத்திற்குக் காரணமான தோழியர்
குழாத்துடனே, அன்னம் மெல்நடையவள் அமர - அன்னம்போலும் மெல்லிய
நடையினையுடைய சுயம்பிரபை உறையாநிற்ப, ஆயிடை - அப்பொழுது, மன்னவற்கு -
திவிட்ட நம்பிக்கு, தூரியம் - மங்கலப்பறைகள், ஏழிசைத்து - இரவின் நாழிகை
ஏழாதலையுணர்த்தும் பொருட்டு, எழுந்த - முழங்கின, கன்னியும் - சுயம்பிரபையும், கடிகமழ்
அமளி ஏறினாள் - மணங்கமழ் தரும் மலரணையின் கண்ணே ஏறுவாளாயினள், (எ - று.)

திவிட்டனுக்குப் படுக்கைக்குச் செல்லுதற்குரிய ஏழாம் நாழிகையை உணர்த்தும் மங்கலப்பறை
முழங்கின. அதுகேட்ட சுயம்பிரபையும் அமளியில் ஏறினாள் என்க. இரவின் ஏழாம்நாழிகை
படுக்கைக்குப் போகும்நேரம் என்பதும் அதனை அறிவிக்க மங்கலப்பறை முழக்கப்படும்
என்பதும் இதனால் உணரப்படும். தூரியம் - ஈண்டு மங்கலப்பறை.
 

( 229 )

பிறை மறைதல்

1056.

மல்லிகை மணங்கமழ் மாலை போகலும்
பல்லிய மவிந்தன பரந்த பாற்கதிர்
மெல்லவே மெல்லவே 2சுருங்கி வீங்குநீ
ரெல்லைசென் றொளித்ததவ் விளவெண் டிங்களே.
 

     (இ - ள்.) மல்லிகை மணங்கமழ் மாலை போகலும் - மல்லிகை மலரின் மணம்மிக்குக்
கமழ்கின்ற அம்மாலைக் காலம் இவ்வாறு கழிந்தவுடனே, பல்லியம் அவிந்தன -
இசைக்கருவிகள் ஒலி அடங்கின, பரந்த பால் கதிர் - பரவிய பால் போன்ற நிலாச்சுடர்,
மெல்லவே மெல்லவே - மெல்ல மெல்ல, சுருங்கி - குறையா நிற்ப, இளவெண்டிங்கள் -
அற்றைநாள் இளம்பிறை, வீங்குநீர் எல்லைசென்று - மிக்க நீரையுடைய குடகடலின்
அகத்தே போய், ஒளித்தது - மறையலாயிற்று. ஏ மூன்றும் அசைகள், (எ - று.)

மாலைக் காலத்தே மல்லிகை மலர்தலின் “மல்லிகை மணங்கமழ்மாலை“ என்றார். மாலை
போகலும் பல்லியம் அவிந்தன, இளவெண்டிங்கள் மெல்லக் கதிர் சுருங்னி ஒளித்ததென்க.
 

( 230 )

     (பாடம்) 1. கேழிகை, கெழுந்த. 2. சுருங்கு.