(இ - ள்.) நல்வினை கழிதலும் - இன்புறுத்தும் நல்வினைப் பயன் நுகர்ந்தொழிந்தவுடனே, நலியும் தீவினை செல்வதே போல் - துன்புறுத்தும் தீய வினைப்பயன்கள் நுகர்ச்சிக்குச் சென்று தலைப்படுமாறு போலே, இருள்செறிந்து சூழ்ந்தது - பகற்பொழுது கழிந்தவுடனே இருள் நெருங்கிப் பரவிற்று, ஆயிடை - அப்பொழுது, படர்ந்த பல்வினை மடிந்தன - பரவிய பல்வேறு தொழில்களும் நிறுத்தப்பட்டன, வல்வினைக்கயவரே வழங்கும் கங்குலே - களவு முதலிய தீவினை செய்யும் கயமாக்கள் மட்டுமே வழங்குதற்குரிய அவ்விரவின்கண், (எ - று.) அவ் விரவின்கண் இருள் சூழ்ந்தது என்க. நல்வினையும் தீவினையும் மாறி மாறி வருதலின் அவற்றைப் பகலிரவுகட் குவமையாக்கினார். கொலை களவு முதலிய தீவினை செய்யும் மாக்களே இரவிடைத் திரிவராதலின் “வல்வினைக் கயவரே வழங்கும் கங்குல்“ என்றார் என்க. |
(இ - ள்.) மாடவாய்த் சுடரொளி மழுங்கி - மாடமாளிகைகளில் ஏற்றப்பட்ட சுடர்விளக்கங்கள் ஒளி குறையாநிற்ப, ஆடுவார் முழவம் கண் அயர்ந்த - கூத்தர்கள் மத்தளங்கள் தொழிலவிந்து உறங்கின, யாழொடு பாடுவார் பாணியும் சுருங்கி - யாழினோடு பாடுகின்ற பாணர்களின் இன்னிசைப் பாடலும் குறைந்து, நன்னகர் - நல்லஅப் போதனமாநகரம், ஆடுநீர் கடற்றிரை அவிந்தது ஒத்தது ஏ - ஆடுதற்குரிய நீர் நிரம்பிய கடல் அலை யொழிந்து கிடப்பதை ஒத்திருந்தது, ஏ : அசை, (எ - று.) ஆடுநீர் - இயங்கு நீருமாம். மழுங்கி - மழுங்க. இஃது இடையாமத்தின் இயல்பு கூறிற்று ; சுடர் ஒளிமழுங்க, முழவங்கண்ணயர, பாணி சுருங்க, நன்னகர், கடல் அவிந்த தொத்ததென்க. |