(இ - ள்.) உவர்விளை - உவர்ப்பை யுண்டாக்குகின்ற கடல்கொடிப் பவளம் ஓட்டிய - கடலிலே தோன்றுகின்ற கொடிப்பவழங்களைத் தோற்கடித்த; துவர் இதழ் வாயவர் - சிவந்த இதழ்பொருந்திய வாயை உடையவர்கள்; துளங்கும் மேனியர் - விளங்குகிற உடலையுடையவர்களும் ஆகிய; அவர்கள் தம் மருள் கொலோ - அம்மகளிருடைய மருளே இவர்தம் வடிவமோ பிறிதோ அறிகின்றிலம்; அனங்கன் - காமனுடைய; ஆய்மலர் கவர்கணை கடைக்கணித்து - அழகிய மலரினாலாகிய உள்ளத்தைக் கவரும் கணைகளைத் தம் கடைக்கண் பார்வையிலே காட்டி; உருவு காட்டினார் - மேலும், அம்மகளிர்க்குத் தங்களுடைய வடிவத்திலே, அக்காமன் இழந்த வடிவத்தையும் காட்டா நின்றனர். (எ - று.) உவர் - உப்பு, கடல், வெறுப்பு. உப்பையுண்டாக்குகின்ற கடல் எனினுமாம். பவளம் ஒட்டிய துவர் இதழ்வாயவர் - இதழ்களின் செந்நிறத்தால் பவழத்தைத் தோற்கடித்துக் கடலுக்கு ஓடச்செய்த மங்கையர். அம்மங்கையர் விசய திவிட்டர்களைக் கண்ணாற் கண்டு மகிழவேண்டும் என்று எண்ணி நிற்கின்றனர். அப்போது தெருவிற் செல்லும் விசய திவிட்டர்கள் அம்மங்கையர்களைக் கடைக் கண்ணாற் பார்த்துக்கொண்டு செல்லுகின்றனர். கவர்கணை - வினைத்தொகை. |