பக்கம் : 681
 

பறவைகளின் தன்மை

1061.

இடஞ்சிறை யிளம்பெடைக் கீந்து பார்ப்பின்மேற்
றடஞ்சிறை வலத்தது கோலித் தாந்தம
தொடுங்குதாண் முடங்கவைத் துறங்கு கின்றன
புடங்கொள்பூம் பொழிலிடைப் புள்ளின் சேவலே.
 

     (இ - ள்.) புடங்கொள் பூம்பொழில் இடை - புடைநகரிலே அமைந்த
மலர்ச்சோலைகளில், புள்ளின்சேவல் - ஆண் பறவைகள், இடஞ்சிறை இளம்பெடைக்கீந்து -
தம் இடப்பாகத்துச் சிறகால், இளமைமிக்க தம் காதற் பெடைகளை யணைத்து, பார்ப்பின்
மேல் - தம் குஞ்சுகளின்மேல், வலத்தது தடஞ்சிறைகோலி - தம் வலப்பாகத்துப் பெரிய
சிறகை விரித்து, தாம் தமது ஒடுங்குதாண் முடங்க வைத்து - தாம் தம்முடைய ஒடுங்கிய
கால்களை முடக்கி வைத்துக்கொண்டு, உறங்குகின்றன - துயில்வன வாயின, ஏ : அசை, (எ
- று.)

இதன்கண் பறவைகளின் அன்புடைமை மிக இனிமை பயப்பக் கூறப்பட்டது காண்க. புடம் -
புடை ; புடைநகர். பொழிலிடைச் சேவல் தம்மிடப்பக்கத்துச் சிறகால் இன்றுணைப்
பெடைதழுவி, வலப்பக்கத்துச் சிறகால் பார்ப்பணைத்துத் துயின்றன என்க.
 

( 235 )

அன்றிலின் காதற்சிறப்பு

1062.

கனைந்ததங் காதலிற் கனவிக் கண்டிறந்
தினைந்தபோன் றிடையிடை நோக்கி யின்குரல்
புனைந்தகம் புணர்பெடை புல்லி மெல்லவே
அனந்தருண் முரன்றன வன்றிற் சேவலே.
 

     (இ - ள்.) அன்றில் சேவல் - ஆண் அன்றிற் பறவைகள் கனைந்த தம் காதலில்
செறிந்த தமது காதல் மிகுதியால், கனவி - கனவுகண்டு, கண்திறந்து - தம் கண்களை
விழித்து, இனைந்த போன்று - பிரிவாற்றாமையின் வருந்தியன போல, இடையிடை நோக்கி
- தம் காதற் பெடையை அடிக்கடி பார்த்து, இன்குரல் புனைந்து - தம் இனிய குரலாலே
மெல்லக் கூவி, அகம்புணர் பெடை - தம் சிறககத்தே பொருந்தும் அப்பெடை அன்றிலை,
புல்லி - தம் சிறகரால் பொருந்த அணைத்துக் கொண்டு, அனந்தருள் - தம் உறக்கத்
தூடேயும், மெல்ல முரன்றன - மெல்லத் தம் துணைபயிர் ஒலியைச் செய்தன, (எ - று.)

காதல்மிக்க அன்றிற்சேவல், தம் பெடையைப் பிரிந்தனபோலக் கனவு கண்டு பின்
கண்திறந்து, பெடையை இடையிடை நோக்கி, இன்குரலாலே மெல்லென அழைத்து,
உறக்கத்தினும் முரன்றன, என்க.
 

( 236 )