பக்கம் : 682 | | உலகின் றன்மை | 1063. | 1மன்னிய மணித்தடத் தாம்பல் வாய்குடைந் தின்னியன் மாருத மியங்குங் கங்குல்வாய்க் கன்னியுங் காளையு மொழியக் காரிரு டுன்னிய வுலகெலாந் துயில்கொண் டிட்டதே. | (இ - ள்.) மன்னிய மணித்தடத்து - நிலைபெற்ற அழகிய குளங்களினுள்ள, ஆம்பல் வாய்குடைந்து - ஆம்பல் மலர்களினகத்தே துளைந்து, இன்னியல் மாருதம் - இனிய இயல்புடைய தென்றல், இயங்கும் - தவழ்கின்ற, கார் இருள் துன்னிய கங்குல்வாய் - கரிய இருள் செறிந்த அவ்விரவின்கண்ணே, உலகெலாம் - இப்பெரிய உலகம் அனைத்தும், கன்னியும் காளையும் ஒழிய - சுயம்பிரபையும் திவிட்டநம்பியும் ஒழிய, துயில் கொண்டது ஏ - உறங்கிற்று, ஏ : அசை, (எ - று.) தென்றலியங்கும் அவ்விரவின் இடையாமத்தே நங்கையும் நம்பியுமொழிந்த அனைத்துயிரும் துயின்றன என்க. “மன்னுயி ரெல்லாந் துயிற்றி அளித்திரா உன்னல்ல தில்லை துணை“ (திருக். 1168) என்னும் குறட் கருத்திதனுட் போந்தமை காண்க. | ( 237 ) | வைகறையின் வருகை | 1064. | நள்ளிரு ளிடையது நடப்ப வைகறை புள்ளிமி ழிசையொடு புகுந்து போம்வழித் தெள்ளிய மதியவன் செய்த தீமைபோன் மெள்ளவே கனையிருண் மெலிவு சென்றதே. | (இ - ள்.) நள் இருள் இடையது நடப்ப - செறிந்த இருளையுடைய இடையாமம் இவ்வாறு கழிந்ததாக, புள்ளிமிழ் இசையொடு - பறவைகள் உறக்கம் நீத்தெழுந்து பாடுகின்ற இசையோடே, வைகறை புகுந்து போம்வழி - வைகறையாமம் தோன்றி நிகழ்கின்றபோது, கனையிருள் - செறிவுடைய இருள், தெள்ளிய மதியவன் - தெளிந்த அறிவுடையொருவனால், செய்த தீமைபோல - செய்யப்பட்ட தீமையைப் போன்று, மெல்லவே மெலிவு சென்றது - பைப்பய மெலிந்து போயிற்று, (எ - று.) தெள்ளிய மதியவன் ஒரோவழி ஊழினாலே தீமை செய்தானாயின் அதற்குப் பெரிதும் நாணி அத்தகைய தீமை மீண்டும் நிகழாது தற்காப்ப அத்தீமை குறைந்து வருதல்போலே இருள் குறைந்தது என்க. | ( 238 ) |
| (பாடம்) 1. மண்ணியல். | | |
|
|