பக்கம் : 683
 

 

1065.

கிளர்த்தன கிலுகிலுப் பரவப் புட்குலாம்
வளர்த்தன மகரயாழ் மருளி யின்னிசை
தளர்த்தன கருங்கடற் றரங்கந் தன்னமே
விளர்த்தது குணதிசை வேலை வட்டமே.
 

     (இ - ள்.) குலாம்புள் கிலு கிலுப்பு அரவம் - தம்முள் குலாவுதலையுடைய
பறவைகளின் கிலுகிலு என்னும் ஒசை, கிளர்த்தன - ஆரவாரித்தன, மகரயாழ் மருளி இன்
இசை - மகரயாழினது
மருட்கையூட்டும் இனிய இசை, வளர்த்தன - எழுப்பப்பட்டன, கருங்கடற்றரங்கம் -
கரியகடலின் அலைகள், தளர்த்தன - குறைந்தன, குணதிசை வேலைவட்டம் தன்னமே
விளர்த்தது - கீழ்த்திசைக் கண்ணதாகிய வளைகடல் சிறிது வெள்ளென விளர்த்தது, (எ -
று.)
தன்னம் - சிறிது. வைகறைப் போதில் காற்றியக்கம் குறைதலால் அலைகள் சிறிது
அடங்குதல் இயல்பு. தளர்த்தன - தளர்ந்தன : வலித்தல் விகாரம். பறவைகள் துயில்நீத்து
ஒலித்தன, பாணர்கள் யாழ் இசை எழீ இயினர், கடற்றரங்கம் தளர்ந்தன, குணதிசை
விளர்த்தது என்க.
 

( 239 )

ஞாயிறு தோன்றுதல்

1066.

ஆணைசெய் தரசுவீற் றிருப்ப வாயிடைக்
கோணைசெய் குறும்புகூர் மடங்கு மாறுபோற்
சேணுயர் திகிரியான் கதிர்சென் றூன்றலும்
பாணியாற் 1கரந்தமுன் பரந்த சோதியே.
 

     (இ - ள்.) அரசு ஆணைசெய்து வீற்றிருப்ப - ஆற்றலுடைய அரசன் ஒருவன்
செங்கோன்மையுடையவனாய் ஆணைச்சக்கரம் உருட்டி அரியணையில் வீற்றிருப்பானாக,
ஆயிடை - அப்பொழுது, கோணை செய் குறும்பு - தீமையே செய்யும் இயல்புடைக் கொல்
குறும்புகள், கூர் மடங்கும் ஆறுபோல் - தம்மிகைச்செயல் ஒழிவதை ஒப்ப, சேண் உயர்
திகிரியான் - விசும்பின்கண் உயர்த்திய ஒற்றை உருளையையுடைய ஞாயிற்றுக் கடவுளின்,
கதிர் சென்று ஊன்றலும் - சுடர் பரந்து நிலவியவுடன், முன் பரந்த சோதி - முன்னர்ப்
பரந்து திகழ்ந்த உடுக்களின் ஒளி, பாணியால் கரந்த - அவ்வைகறைக் காலப்பகுதியோடே
மறைந்தொழிந்தன, (எ - று.)

கோண் + ஐ = கோணை - கோணுதலையுடைய செயல் எனவே தீவினை என்றபடி. பாணி -
காலம்.

 

     (பாடம்) 1. கரந்தன.