பக்கம் : 684
 

     “உரைசெய் திகிரிதனை யுருட்டி ஒருகோலோச்சி உலகாண்ட
அரைச னொதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற தரக்காம்பல்“
என்று கம்பநாடர், இரவின் வருகையின் பொருட்டு இச்செய்யுட் கருத்தை மாற்றி யமைத்துக்
கொண்டமை காண்க.
 

( 240 )

 

1067.

விளித்தன புலரிவெண் சங்கம் வேரியாற்
களித்தன கயமலர்த் தொழுதி யம்மல
ரொளித்துமுன் னுறங்கிய வொலிவண் டார்த்தன
தெளித்தது செறிபொழிற் றேம்பெய் மாரியே.
 

     (இ - ள்.) புலரி வெண்சங்கம் விளித்தன - விடியற் காலத்திலே ஒலிக்கும் மரபினவாய
மங்கலச் சங்கங்கள் முழங்கின, வேரியால் கயம் மலர்த் தொழுதி - மணத்துடனே குளத்தின்
கண்ணவாய தாமரை மலர்க் கூட்டங்கள், களித்தன - மலர்ந்து விளங்கின, அம்மலர்
ஒளித்து முன் உறங்கிய ஒலி வண்டு - அத்தாமரை மலர்களின் அகத்தே முதல்நாள் மாலை
ஒளித்து உறங்கிய இசைவண்டுகள் உறக்கம் ஒழித்தெழுந்து, ஆர்த்தன - ஆரவாரித்தன,
செறிபொழில் தேம் பெய் மாரி தெளித்தது - செறிந்த பூஞ்சோலை தேனாகப்
பெய்தலையுடைய மழையைப் பொழிந்தது, (எ - று.)

கதிர் தோன்றுங்கால் கோட்டுப்பூக்கள் மலர்ந்தது தேன் துளித்த லுண்மையின் தேம்
பெய்மாரி தெளித்த தென்றார்.
 

( 241 )

 

1068.

தூண்டிய சுடர்விளக் கன்ன கன்னியோ
டாண்டகை யழல்வலஞ் செய்யு மாரணி
காண்டகை யுடைத்தது காண்டு நாமென
வீண்டிய கதிரவ னுதய மேறினான்.
 

     (இ - ள்.) தூண்டிய சுடர்விளக்கு அன்ன கன்னியோடு - தூண்டப்பட்ட
ஒளிப்பிழம்பையுடைய விளக்கைப் போன்ற சுயம்பிரபையுடனே, ஆண்டகை - திவிட்டநம்பி,
அழல் வலம் செய்யும் ஆர் அணி - திருமணவினையில் தீயை வலம்வரும் பேரழகு, காண்
தகை உடைத்து - காணத்தகும் மாண்புடையதாகலின், அது நாம் காண்டும் என -
அக்காட்சியை யாமும் சென்று காண்போம் என்று கருதியவளைப்போன்று,
ஈண்டிய கதிரவன் - செறிந்த சுடரையுடைய ஞாயிறு, உதயம் ஏறினான் - உதயகிரியின் கண்
ஏறித் தோன்றுவானாயினான். ( எ - று.)
தீவலஞ் செய்தவனைக் காண விரும்பி ஞாயிறு குணதிசையில் வந்து தோன்றினான், என்க.
 

( 242 )

     (பாடம்) 1. யாமென. 2. நணித்துஞ், நணித்துச்.