(இ - ள்.) பாறை பொதி பனி உருகின உக்கநீர் - பாறைப் பற்களை மூடிய பனிக்கட்டிகள் உருகினவாய் உகுத்த பனிநீரை, பகலவன் பரவை வெங்கதிர் பருகின - கதிரவனுடைய பரவுதலையுடைய வெவ்விய சுடர்க் கற்றைகள் குடித்தன, சுயம்வளர் ஆம்பல் - குளத்தின் கண்ணே வளர்ந்துள்ள ஆம்பல் மலர்கள், கருகின - கூம்பிக் கருகின, திசைமுகம் பெயர்ந்தது ஒத்து கண்கொளப் பெருகின - திக்குகள் புடைபெயர்ந்து விரிவதே போன்று கண்களுக்குத் தோன்றுமாறு விரிந்தன, (எ - று.) ஒளிமிக மிகத் திசைகளிற் சேய்மையிலுள்ள பொருள்களும் காணப்படுதல், திசை இடம் பெயர்ந்து விரிந்து செல்வதுபோற்றோன்றுகின்றது என்ற உவமை உணர்ந்து மகிழ்தற்பாலது. |
(இ - ள்.) நிறைந்தார் - சான்றாண்மையான் சிறந்த பெரியோர், கடிநல்வினை - திருமணமாகிய மங்கலச் செயலுக்குரிய, நீதியினால் - முறைமையாலே, அறைந்தாங்கு - கூறியபடியே, அது சென்றது - அச்செயல் நடைபெறுவதாயிற்று, சென்ற வகை - யாம கூறத் துணிந்த வகையில், சிறந்தாளொடு காளை திறத்து உரை - சுயம்பிரபையோடு திவிட்டநம்பியின் திறத்தில் நிகழ்ந்து புலம்புரைகளை, யாம் மறந்தனம் - யாம் சொல்ல மறந்து விட்டோம், அது வல்லவர் சொல்லுக - அவ்வுரையைச் சொல்வதாயின் பேராற்றலுடையோர் சொல்வாராக. எனவே, கிட்டாதாயின் வெட்டென மற என்றவாறு எம்மால் இயலாமை அறிந்து யாம் மறந்துவிட்டோம் என்பது கருத்தாயிற்று. அது யாவரானும் சொல்ல வியலாததாம் என்பது குறிப்பு. இனி, சிறந்தாளொடு காளைதிறத்து உரை யாம் மறந்தாம் அது வல்லவர் சொல்லுக; கடிநல்வினை சென்றது; அது சென்ற வகை யாம் சொல்லுதலும் என்று வருவித்து முடிப்பினுமாம். |