பக்கம் : 686
 

விழா முரசு அறைதல்

1071.

குருமா மணிவேய் குடைமும் மையுடைப்
பெருமா னடிபே ணியபூ சனைநாள்
கருமால் களியா னைகண்மேற் கனபொன்
அருமா முரசார்ப் பவறைந் தனரே.
 

     (இ - ள்.) குருமாமணி வேய் குடை மும்மை உடைப் பெருமான் - நிறமமைந்த
மணிகளாலே அழகு செய்யப்பட்ட குடைகள் மூன்றனையுடைய அருகக்கடவுளின், அடி
பேணிய - திருவடிகளைப் போற்றுதற் பொருட்டு, பூசனைநாள் - விழா நாளை, கருமால்
களியானைகள்மேல் - கரிய நிறமுடைய பெரிய மதமயக்கம் கொண்ட அரசுவாக்களின்
எருத்தத்தே, அருமாமுரசு ஆர்ப்ப அறைந்தனரே - அரிய பெரிய முரசங்களை ஏற்றி
ஆரவாரிப்பச் செய்து அறிவிப்பராயினர், (எ - று.)
முக்குடை நிழற்றும், பெருமான் திருவிழா நாளை, யானையேறி முரசறைந்து, மாநகர்க்
கீந்தார் என்க.
 

( 245 )

 

1072.

முரசும் 1முழவின் குழுவும் முடிசேர்
2அரசன் னகரார் குழுவுங் கெழுமி
விரையும் புகையும் 3விரவும் பலியின்
இரையுந் நெடுவீ திநிறைத் தனவே.
 

     (இ - ள்.) முரசும் முழவின் குழுவும் - அவ்வழி முரசங்களும் மத்தளங்களும், ஆகிய
இன்னோரன்ன தோற்கருவியின் கூட்டங்களும், அரசன் நகரார்குழுவும் கெழுமி - அப்
போதன நகரத்தே வாழ்கின்ற மாந்தருடைய கூட்டங்களும் நெருங்கி, விரையும் புகையும்
விரவும் பலியின் - மணப்பொருள்களும் மணப்புகையும் கலந்த கடவுட் பலியோடு, இரையும்
நெடுவீதி - முழக்கமுடைய நீண்ட தெருக்களை, நிறைத்தன - நிறைத்து விட்டன, (எ - று.)

பலி - கடவுட்கியற்றும் பூசனைப்பொருள். குழுவும், குழுவும், பலியோடு, கெழுமி, நிறைத்தன
என்க. இனிக் கெழுமிப் பலியால் வீதி நிறைத்தன எனலும் ஒன்று.
 

( 246 )

 

1073.

பிடியுங் களிறும் பிறவுந் நெரிவுற்
றடியும் 4மிடவா 5மிடமின் 6றிலகும்
கொடியுங் குடையுங் குளிர்சா மரமும்
முடியின் சுடரும் மிசைமூ டினவே.

    

 

     (பாடம்) 1. முழவும் குழுமி. 2. அரசர் நகரின் குழுவும், அரசன் நகரின் குழுவும். 3. மலரும். 4. மிடலா. 5. மிடநன். 6. றிலது.