பக்கம் : 689
 

     துவர்வாயிளையார் சிந்திய முத்தணிகள் செறிந்து, வீதியின் வாய்ச் செல்வோரைத்
தடுத்துக் கிடந்தன, என்க.
 

( 251 )

மணமுரசு அறைதல்

1078.

துகிலார் கொடிபொங் கினதொங் கனிமிர்ந்
தகிலார் புகையா வியடுத் 1தமையாற்
பகலா னொடுவந் திரவும் பகலே
யிகலா துடனா கியியைந் துளவே.
 

     (இ - ள்.) துகில் ஆர் கொடி பொங்கின - துகில் பொருந்திய கொடிகள்
நெருங்கினவற்றோடு, தொங்கல் நிமிர்ந்து - தொங்கல்கள் நெருங்கி, அகில் ஆர் புகை
ஆவி அடுத்தமையால் - அகில் பொருந்திய மணப்புகையாகிய ஆவியும் கலந்ததனாலே,
பகலானொடு - கதிரவனோடு, பகலே இரவும் வந்து - பகற்போதிலேயே இராப்போதும்
ஒருங்கே வந்து, இகலாது - ஒன்றோடொன்று மாறுபடுதலின்றி, உடனாய் இயைந்துள -
ஒன்றாகிக் கலந்திருந்தன, (எ - று.)
துகிலாலாய கொடிகளும், தொங்கல்களும், செறிய அகிற்புகையும் கலந்து, அப்பகலிலே
இரவையும் வரச் செய்தன, என்க.
 

( 252 )

 

1079.

பலர்மன் னியபா டலுமா டலுமே
வலமன் னிமயங் கிமுயங் குதலால்
நிலமன் னவருந் நெடுமால் வரைமேற்
குலமன் னவருந் குளிர்தூங் கினரே.
 

     (இ - ள்.) பலர் மன்னிய பாடலும் ஆடலுமே - கூத்தரும் பாணரும் பலர்கூடி
இயற்றிய இசையுடனும் கூத்துடனும், வலம் மன்னி மயங்கி முயங்குதலால் - வலமாக
வருதலைப் பொருந்திக் கலத்தலால், நிலமன்னரும் - பயாபதி முதலிய நிலமாள் வேந்தரும்,
நெடுமால் வரைமேல் குலமன்னவரும் - நீண்ட பெரிய இமயமலைமேல் வாழ்பவராகிய
உயர்குல வேந்தராகிய சடி முதலியோரும், குளிர் தூங்கினர் - அக்கலையின்பங்களை
நுகர்ந்து மகிழ்ந்தார்கள், (எ - று.)

கூத்தர், பாணர் முதலியோரியற்றிய, ஆடல்பாடல்களைக் கண்டும், கேட்டும் அரசரெல்லாம்
மகிழ்ந்தனர், என்க.
 

( 253 )

     (பாடம்) 1. யடுத்துமையால்.