(இ - ள்.) கடல்ஒளி மணிவணன் - கடலின் ஒளியைப் போலும் அழகிய நிறத்தையுடைய இளைய நம்பியாகிய திவிட்டன்; கனவில்வந்து - கனவின்கண்ணே தோன்றி; எமது உடல் அகம் வெறுவிதாய் - எமது உடலானது ஒன்றுமில்லாததாக; உள்ளம் வவ்வினான் - மனதைக் கவர்ந்து கொண்டு சென்றான்; விடல் இலன் - அவன் அவ்வுள்ளத்தை எம்பால் விடுகின்றான் இல்லை, எம்உயிர் விடுக்கும் கொல்என - உள்ளமற்ற படியினாலே எமதுயிரானது போய்விடுமோ என்று; மடவரல் அவர்குழாம் - இளம் பெண்களது கூட்டம்; மயக்கம் உற்றது - மனச்சுழற்சியை அடைவதாயிற்று. (எ - று.) திவிட்டனைக் கனவிற் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்த மங்கையர் கூற்று இது. பிற ஆடவர்களை மங்கையர் எண்ணலாமோ எனின் இம்மடவரல் குழாம் மணமாகப் பெறாத கன்னிகையர் குழாம் என்க. உடலகத்திற்கு உள்ளந்தான் உயிர்நாடியாகவுள்ளது. அவ்வுள்ளம் பறிபோய்விடின் பின்னர் உடலகம் வெறுவிதாகும். |