பக்கம் : 690
 

 

1080.

அகல்வா னிடையங் கிழிவா னவரும்
முகிலா றிழிவிஞ் சையரும் 1முடுகிப்
பகலா னொடுதா ரைபரத் தனபோற்
புகலா 2லொளிபோந் ததுபொன் னகரே.
 

     (இ - ள்.) அகல்வானிடை அங்கிழி வானவரும் - அகன்ற விசும்பினின்றும்
அவ்விடத்தே இறங்கிய அமரரும், முகில் ஆறு இழி விஞ்சையரும் - முகில் இயங்கும்
மேகமண்டலத்தினின்றும் இறங்கிய விச்சாதரரும், முடுகி - நெருங்கி, பகலானொடு -
கதிரவனோடு, தாரை பரந்தனபோல் - உடுக்கள் கலந்தாற் போல, புகலால் - புகுதலாலே,
பொன்னகர் ஒளி போந்தது - அழகிய போதனமாநகரத்தின் கண்ணே ஒளிபுக்கு நிறைந்தது,
(எ - று.)

தாரை - தாரகை. இயற்கையிலேயே உடல் ஒளிபடைத்த வானவரும் விஞ்சையரும் வான்வழி
வருதலால் ஞாயிறோடே தாரகைகள் கலந்தாற் போன்று அந்நகர் ஒளிமிக்கது.
 

( 254 )

 

1081.

வடமே ருமுகட் டலரும் மலரும்
புடமே ரு3 பொலிந் தலரும் மலருந்
தடமே 4லுளபொன் னவிழ்தா மரையுந்
5திடமே வியவிஞ் சையர்சிந் தினரே.
 

     (இ - ள்.) வடமேரு முகட்டு அலரும் மலரும் - மேருமலையின் கொடுமுடிகளிலே
மலர்ந்த மலர்களையும், புடமேரு பொலிந்தலரும் மலரும் - பக்கமலைகளிலே அழகுற்று
மலர்ந்த மலர்களையும், தடமேலுள பொன் அவிழ் தாமரையும் - குளங்களிலே
மலர்தலையுடைய அழகு விரிகின்ற தாமரை மலர்களையும், திடம் மேவிய - வலிமை
பொருந்திய, விஞ்சையர் சிந்தினரே - விச்சாதரர்கள் பொழிந்தனர், (எ - று.)
விச்சாதரர், தாம் வாழும் மேருவில் மலர்கின்ற தெய்வமலர்களையும், வேறுபல மலைகளிலும்
மலர்ந்த மலர்களையும், பொற்றாமரை மலர்களையும், சிந்தினர் என்க.
 

( 255 )

 

1082.

அணிவேண் டினர்கொள் ளவடுத் தனவு
மணிவேண் டினர்கொள் ள6வகுத் தனவுங்
கணிவேண் டினநாள் கழியுந் துணையும்
பணிவேண் டினர்வீ திபரந் தனவே.

    

 

     (பாடம்) 1. விரவிப். 2. ரொளி. 3. கலத். 4. ருள. 5. மடமேவினர். 6. வுகுத்.