பக்கம் : 697
 

அழலோம்பாளர் வருகை

1094.

நங்கைமண வேள்விநக ரெய்துவதன் முன்னைப்
பொங்குபுரி 1நூலனலர் தாமரைபு னைந்தார்.
மங்கலவு ழைக்கலநி ரைத்த 2மண மாட
மங்கதுபு குந்தழல்வ ளர்க்கியவ மைந்தார்.
 

     (இ - ள்.) நங்கை மணவேள்பி நகல் எய்துவதன் முன்னர் - சுயம்பிரபை திருமண
வேள்விமன்றத்தை அடைவதன் முன்னரே, பொங்கு புரிநூல் அனலர் - மிக்க புரிநூல்
பூண்ட தீயோம்பாளர்கள், தாமரை புனைந்து ஆர் மங்கல உழைக்கலம் நிரைத்த மண
மாடம் - தாமரை மலர் வடிவிற்றாக இயற்றிப் பொருந்திய மணமங்கல வினைக்கியன்ற
உழைக்கலம் பிறவும் நிரலாக வைக்கப்பட்ட மண மன்றமாகிய, அது புகுந்து - அதன்கட்
சென்று, அங்கு தழல் வளர்க்கிய அமைந்தார் - அவ்விடத்தே வேள்வித் தீயை
வளர்ப்பதற்கு அமைந்தனர், (எ - று.)

தாமரை மலர்மாலையை அணிந்துகொண்டு எனினுமாம். தீயோம்பாளர் நங்கை
எய்துமுன்னம், மங்கலக்கலம் பரப்பிய மணமாடத்தே, தாமரை வடிவிற்றாய குண்டமிட்டுத்
தழல் வளர்ப்பாராயினர், என்க.
 

( 268 )

வேள்வியாசான் அமைதி

1095.

சாந்துமெழு கிட்டதட மாமணிநி லத்தைச்
சேர்ந்துதிகழ் பொன்னியல்ச லாகைநுதி தீட்டிப்
போந்துமொரு 3கால்விரைபெ ருக்கிமெழு கிட்டா
ளாய்ந்தமறை யோதியத னாரிடம றிந்தான்.
 

     (இ - ள்.) ஆய்ந்த மறை ஓதி அதன் ஆரிடம் அறிந்தான் - சான்றோரான்
ஆராயப்படட நான்கு மறைகளையும் நன்கு ஓதி அம்மறையகத்தவாகிய இருடி
வாசகங்களையும் நன்கு அறிந்தவனாகிய வேள்வியாசான், சாந்து மெழுகிட்ட தடமாமணி
நிலத்தைச் சேர்ந்து - முன்னரே நறுமணச் சாந்தால் நன்கு மெழுகப்பட்டு விரிந்துள்ள
சிறந்த மணிகள் பதித்த தரையை எய்தி, பொன்னியல் சலாகை நுதி தீட்டி -
பொன்னாலியன்றதொரு கோலினது கூர்நுனியால் கோடுகள் வரைந்து காட்டி, பேர்ந்தும்
ஒருகால் விரைபெருக்கி மெழுகிட்டான் - மீண்டும் ஒருமுறை மணப்பொருள் கூட்டிய
சாந்தாலே அவ்வரைந்து காட்டிய இடத்தை மெழுகும்படி செய்தான், (எ - று.)

 

     (பாடம்) 1. நூலணலர். 2. மணிக்குடம். 3. கால் விரையினான், மெழுகு வித்தான்.