தெருண்டார் கொளப்பட்டதென்றமையால் ‘நா‘ என்றது தெருளாதார் நா என்பதுபட நின்றது. நா உரைக்கும் மாண்பு என்? குறை என்? என மாறி என் என்னும் வினாச்சொல்லை மாண்போடும் கூட்டிப் பொருள் கூறுக. ‘குறை யென்னினும்‘ என்றும் பாடம். நாமம் - அச்சம். தேம் - தேன். அலங்கல் - மாலை. திருவுடையாரைக் காணின் திருமாலைக் கண்டேன் என்னும் மரபுபற்றித் திருமால் நெடுஞ்சேந்தன் என்றார். தூ - தூய்மை - நல்லிலக்கணமுடைமை; மாண்பு - அறமுதலிய உறுதிப் பொருளைக் குறையின்றி உணர்த்தும் சிறப்பு. தமிழ் என்றது தெய்வத்தமிழ் என்பதுபட நின்றது. சங்கம்வைத்துத் தமிழ் வளர்த்த சிறப்புநோக்கித் தமிழ்க்கிழவன் என்றார். கிழவன் - உரிமையுடையோன். சுடர் ஆரமார்பிற் கோமான் என்றது இந்திரன் இட்ட ஆரத்தைத் தாங்கியதொரு பெருமையைக் குறித்து நின்றது. என்னை? “தேவரார மார்பன்“ என்றும், “வானவர்கோன் ஆரம் வயங்கிய தோட் பஞ்சவன்“ என்றும் ஆசிரியர் இளங்கோவடிகளாரும் இயம்புதல் உணர்க. இனி ஆரம் முத்துமாலை என்னுமளவே கொண்டு பாண்டியன் முத்திற்குரிமையுடையனாதல் குறித்ததாம் எனினுமாம். சேந்தன், ஒரு பாண்டியமன்னன். இவன் அவையில் இந்நூல் அரங்கேற்றப் பட்டமையால் இவன் சூளாமணிமாறவர்மன் எனப் பட்டான் என்பர் வரலாற்று நூலோர். இச்செய்யுளும் அதற்குச் சான்றாதல் அறிக. |