பக்கம் : 70
 
     இது விசயனைக் கண்டு மயங்கினா ளொருத்தி கூற்றென்க.
இவள் பேதைமை:-

          ... ... ... “நெஞ்சிடை வஞ்சன் வந்து
          புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலங்கொள்வாயில்
          சிக்கென அடைத்தேன் தோழி“ (கம்ப. உலா. 14)

என்று கூறிய மிதிலை நகரத்தாள் பேதைமையைப் போன்றது.
வளைவண்ணன் - விசயன். வார் - நீர்.

 ( 13 )

மங்கையர் மாட்சி

83. கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத்
துண்ணிலா வெழுதரு காம வூழெரி
எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
1பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே.
 

     (இ - ள்.) கண்நிலாம் கவின் ஒளிக் காளைமார் திறத்து - காண்போர் கண்ணில்
நின்றுநிலவும் அழகொளியையுடைய இளைஞர்களாகிய விசயதிவிட்டர் பொருளாக;
உள்நிலாம் எழுதரு காம ஊழ் எரி - தம் உள்ளத்தே தோன்றி எழுகின்ற காதலாகிய
ஊழித் தீயானது; எண்இலாச் சுடர் சுட விரிந்தும் - கணக்கற்ற சுடர்களைக்கொண்டு
சுடுமாறு பரவியெழுந்தும்; நாண் விடா - வெட்கத்தினை விடாத; பெண்ணலால் உயிர்
பெரியது - இப்பெண் களின் உயிரினும் சிறந்த உயிர்; பிறிது இல்லை - மற்றொன்றில்லை.
(எ - று.)

விசய திவிட்டர்களிடத்திலே மங்கையர்க்கு உண்டாகிய காமத்தீயானது மிகுதியாகப்
பரவியெழுந்தும் அம்மங்கையர்கள் தங்கட்குரிய நாணத்தினை விடாமலே உயிரினைத்
தாங்கியிருக்கின்றனர். இதனால் அம்மங்கையரது மனத்திண்மையுங் கற்புநலமும் எளிதிற்
புலனாம்.

( 14 )

          இதனைக் “கடலன்ன காம முழந்து மடலேறாப்
          பெண்ணிற் பெருந்தக்க தில்“ (குறள். - 1137)

எனவரும் திருக்குறளோடு ஒப்பு நோக்குக.


     (பாடம்) 1. பெண்ணிலாம் பிறதுயர்.