பக்கம் : 701
 

     வலப்புறத்தே திரிந்து சுழலுமாறும் கொளுவி, அந்தணனும் - வேள்வியாசானும், அங்கு
அழல் அமைத்து வேட்டான் - அவ்விடத்தே தீயோம்பி வேள்வி செய்தான், மைந்தனும் -
திவிட்டநம்பியும், மடந்தையை - சுயம்பிரபையை, தன் மனத்தின் - தன் மனத்தினுள்ளே,
மிக வேட்டான் - மிக விழைவானாயினன், (எ - று.)

கந்துள் - கரிக்கட்டி. அந்தணனும் அங்கு அழல் அமைத்து வேட்டான், மைந்தனும் தன்
மனத்துள்ளே காதலமைத்து வேட்டான் என்க.
 

( 275 )

நம்பியும் நங்கையும் தீவலஞ் செய்தல்

1102.

பொங்கழல்செய வேள்விமுறை 1போற்றலுமெ ழுந்தா
னங்கையின ணங்கினணி மெல்விரல்பி டித்து
மங்கையொடு காளைவல னாகவரு கின்றான்
கங்கையொடி யைந்துவரு கார்க்கடலொ டொத்தான்.
 

     (இ - ள்.) பொங்கு அழல் செய் வேள்விமுறை போற்றலும் - மிக்கெழுதலையுடைய
தீயாற் செய்யும் வேள்விச் சடங்கனைத்தும் செய்துமுடித்தவுடன், எழுந்தான் -
மணத்தவிசினின்றும் எழுந்து, அணங்கின் அணிமெல்விரல் - சுயம்பிரபையின் மோதிரம்
அணிந்த மெல்லிய விரலை, அங்கையின் - தனது அழகிய கையாலே, பிடித்து -
பற்றிக்கொண்டு, மங்கையொடு - அச் சுயம்பிரபையோடே, காளை - அத்திவிட்டநம்பி,
வலனாக வருகின்றான் - வலஞ்சுற்றி வருகின்றவன், கங்கையொடு இயைந்து -
கங்கையாற்றோடு பொருந்தி, வரு கார்க்கடலோடு ஒத்தான் - புடைபெயர்ந்து வருகின்ற
கரியகடலை ஒத்து விளங்கினான், (எ - று.)

அங்கையின் அணங்கின் என்புழி, மாதங்கி என்னும் தெய்வம் உறையும் எனினுமாம்.
நங்கையின் மெல்விரலைத் தன் அங்கையாற்பற்றித் தீவலஞ் செய்வான், கங்கையொடு
புடைபெயரும் கார்க்கடலொத்தான், என்க.
 

( 276 )

நம்பி கைப் பற்றியபோது நங்கைகொண்ட நாணச் சிறப்பு

1103.

கைம்மலரின் வீரனவள் கைம்முகிழ்பி டிப்ப
மெய்ம்மயிரெ றிந்துமணி 2வேர்நுதல ரும்பிச்
செய்ய 3தன சீறடிகள் செவ்வனிட மாட்டா
வம்மயிலி 4னாணதனை யாவரறை கிற்பார்.

    

 

     (பாடம்) 1. முற்றலு. 2. நீர். 3. மலர்ச். 4. னாளாதிடா.