(இ - ள்.) அங்கம் இருமூன்றும் மறைநான்கு அலகில் கற்பம் - ஆறு உறுப்புக்களும் நான்கு மறைகளும் எண்ணிறந்த மந்திர நூல்களுமாய், விஞ்சை என இங்குமுடி இன்ன கரை கண்ட வித்தைகள் என்று இவ்வுலகத்தே அறிஞர்களால் முடிபு கூறப்பட்ட இவையிற்றைக் கற்றுத் துறைபோயவனும், பொங்கு எரிய வேள்விவல் - மிக்கெரிகின்ற தீயையுடைய வேள்விகளை வேட்பதில் வல்லுநனும் ஆகிய, புரோகிதன் அவற்கு - ஆசான் ஆகிய அவ்வந்தணனுக்கு, சங்கநிதி என்ன - விரும்பியவற்றைச் சுரந்தளிக்கும் கடவுட்டன்மையுடைய சங்கநிதியைப் போன்று, நெதிமாரி தருவித்தார் - பொருள் மழையை வரவழைத்தார், (எ - று.) கற்பம் - மந்திரநூல். ஆறங்கமும், நான்குமறைகளும், எண்ணிறந்த கற்பங்களுமாகிய வித்தையெல்லாம் கரைகண்ட, அவ்வாசாற்குச் சங்கநிதி பொழியுமாப் போலே நிதி பொழிந்தார், என்க. |
(இ - ள்.) வானநெறி எங்கும் வளர் சோதி வடமீனை - விசும்பிற் றான் இயங்கும் வழியெங்கும் பரவும் ஒளியையுடைய அருந்ததியை, கானமயில் அன்னவள் தன் முன்னை நனிகாட்ட - காட்டகத்தே வாழுமியல்பிற்றாய மயில்போலும் சாயலையுடைய சுயம்பிரபைக்கு முன்னரே சுட்டி நன்கு காட்டாநிற்ப, யானும் இவள்போல் உலகு காண இயல்வேனோ - யானும் இவ்வருந்ததி போன்று உலகில் வாழும் ஏதிலாரெல்லாம் பார்க்குமாறு திரிவேனோ? அவ்வாறு திரிதற்கு, ஈனமொடு - கீழ்மைக் குணமுடைமையும், நாணமிலனோ என - நாணம் இல்லாமையும் உடையேன் கொல் என்று, இகழ்ந்தாள் - அவ்வருந்ததியை இகழ்வாள் ஆயினாள், (எ - று.) அருந்ததி பலரும் காணத்திரிதலால் ஈனமுடைமையும் நாணமின்மையும் உடையாள் என்றிகழ்ந்தாள் என்க. உலகிலுள்ள ஏனைய மகளிர்க்கு நீயில் இவ்வருந்ததிபோல வாழ்மின் என்று காட்டப்படும் அருந்ததியை அருந்ததியினும் சிறந்த இவட்கு நூன்முறைப்படி காட்னராகலின் அவள் அவள்பாற் குறை கண்டு கூறினள் என்பதாம். |