(இ - ள்.) என மணவினைகள் செல்ல - என்றிங்குக் கூறியவாற்றான் திருமண வினை செல்லாநிற்ப, இன்னணம் எய்துகென்று - இவ்வாறு பெருஞ்செல்வ நுகர்ச்சியை யாமும் பெறக்கடவேம் என்று எண்ணி, புனவரை கானம் உன்னி - புனங்கள் பொருந்திய மலைகளையும் காடுகளையும் கருதி, (வேண்டிய வேண்டியாங்கு அளித்தல் உண்மையின் அப்பெற்றித்தாய), மாதவம் போகுவாரும் - சிறப்புடைய தவநெறிக் கண்ணே புகுவாரும், இனமலி செல்வம் மற்றும் இப்படி வருவதுண்டோ கனவினும் என்ன - சுற்றம் சூழ்ந்து மிகுதற்குக் காரணமான செல்வப்பேறு உலகிற் பலர்க்கு வருவதுண்டாயினும் இவ்வாறு வந்துள்ளதை யாம் எம் கனவிற்றானும் காணப்பெறேம் என்றிவ்வாறு கூறி, மாந்தர் - மக்கள், கண்டு மீள்வாரும் ஆனார் - அப்பேற்றைக் கண்ணரக்கண்டு மேலும் காண்டற்கும் இடம் பெறாராய் மீண்டு வருவாரும் ஆயினர், (எ - று.) மாந்தர் தவம் புகுவாரும், கண்டு மீள்வாரும் ஆயினார் என்க. எனறிவ்வாறு நங்கையின் மணவிழா நடவாநிற்ப, அதனைக் கண்டோர், யாமும் இவ்வாறு செல்வம் பெறுதும் என்று கருதித் தவம் போகுவாரும், இப்படிக் கனவினும் செல்வம் எய்தினாருண்டோ என்பாரும், காண்பாரும், மீள்வாரும் ஆயினர் என்க. இதனை ‘ஏசுவதில்லா வாசவதத்தையும்........ வத்தவர் இறைவனும், முற்பான் முயன்ற, அத்தவம் அறியின் எத்திறத்தாயினும் நோற்றும் என்னும் கூற்றின ராகிÓ எனவரும் பெருங்கதையோடு (2 - 7: 120 - 25) ஒப்பு காண்க. |
(இ - ள்.) இடிபடும் முரசில் சாற்றி - இடியைப் போன்று முழங்குகின்ற முரசறைந்து முன்னர் அறிவித்து, ஏற்பவர் - இரவலர்களுடைய, ஆசைதீர - அவாக்கெடும் அளவிற்றாய், பொன்னொடு - பொற்றிரளுடனே, சுடர்விடு மணியின் மாரி சொரிய - ஒளிவிடுகின்ற மணியை மழைபோன்று வழங்குக என்று, ஏவி - அதற்குரியாரை ஏவிவிட்டுப் பின்னர், கன்னியோடு - |