பொருந்தி, சால - மிகவும், நிலவிய மதுவுண்டார்போல் - வெறி நிலவுதலையுடைய கள்ளருந்தினவர்களைப் போன்று, காமம் நெஞ்சுண - காமவின்பம் தம் உள்ளத்தை விழுங்கிவிட, மயங்கியிட்டார் - அவ்வின்பத்தே மயங்கிக் கிடந்தார், (எ - று.) மார்பில் குவிமுலைக் குவடுபாய, கலவியும், களிப்பும் புலவியும் கலந்து நிறைய, மதுவுண்டார்போல் மயங்கினர் என்க. |
(இ - ள்.) அடிக்கலம் திருத்தி - சுயம்பிரபையின் அடிகளிலே அணிந்துள்ள பாடகம் முதலிய அணிகலன்களைத் தன் கைகளாலே திருத்தி, அம் மெல் புரிகுழற் சுருளை நீவி - அழகிய மெல்லிய முருக்குடைய அளகச் சுருளைத் தடவி, முடிக்கு அலர் அணிந்து - தலையிலே மலர் சூட்டி, காதல் முகிழ் நகை முகிழ்ப்பப் புல்லி - காதலின்பத்தாலே அவள் நுண்ணிதின் மகிழத்தழீஇ, கவான் மிசை யிருத்தி - தனது தொடையிலே பொருந்த வைத்துக்கொண்டு, கடைக் கணியாய காளை - அவளைத் தன் கடைக்கண்ணாலே பார்க்கின்றவனாகிய திவிட்டன், குடிக்கு அணியாய - பிறந்ததும் புக்கதுமாகிய இருமுதுகுடிக்கும் நன்கலமாகிய, காமர் கொம்பு கேட்க - அழகிய பூங்கொம்பை ஒத்த சுயம்பிரபை இனிது கேட்குமாறு, இதனைச் சொன்னான் - பின்வரும் நலம் பாராட்டுரைகளை நவில்வானாயினான். மற்று: அசை, ( ) நம்பி நங்கையின் பாடகம் முதலியதிருத்தி, நீவி, அணிந்து, புல்லி, கடைக்கணித்துப் பார்த்துக், கவான் மிசை யிருத்திக், கேட்கச் சொன்னான் என்க. கடிக்கணியாய காளை என்றும் பாடம்; இதற்குத் திருமணத்திற்கு ஓர் அணியாகவுள்ள திவிட்டன் என்க. நேரிற் பார்த்தால் நாணுதலின், பாராதவனைப் போன்று கடைக்கணாற் பார்த்தான் என்க. |