(இ - ள்.) வேனில் உடை வேர்தன் - வேனிற் பருவத்திற்குரிய மன்னனாகிய காமவேள், வென்றிக்கு - இவ்வுலகனைத்தும் வெல்லுவதனைக் கருதி, பானல் நெடுங்கண் இவையே பகழியா - நீலோற்பல மலரை ஒத்த இவளுடைய நெடிய கண்களாகிய இவையிற்றையே தன் அம்புகளாகப் பெறும் பொருட்டு, நோற்றானே - நோன்புசெய்து பெற்றான், அளியத்தேன் - அளிக்கத்தக்கவனாகிய, யானும் - யானும், இத்துணை ஓர் காலமும் - இவ்வளவு நீண்ட காலமனைத்தும், தேன் ஆர் நறுமேனி - தேன்போல இனிதாகிய இவள் திருமேனியை, தீண்டுதற்கு - தொட்டின்புறுதற்கு, நோற்றேன் - நோன்பு செய்தேன், ஏ மூன்றும் அசைகள், (எ - று.) தேன் நிறமுடைய மேனியுமாம், இவள் கண்களால் காம வேட்கு வெற்றி கிடைத்தலின் இவையிற்றை நோன்பு செய்து அம்பாகப் பெற்றான் என்க. அவள் ஊடுதலால் அவள் மெய் தொடுபவன் இவ்வாறு கூறினான். மன்மதன் நோற்றபடியே இவள் என்னை வென்று விடுகிறாள், யான் தீண்டுதற்கே நோற்றேன் அதனாலன்றோ அவள் என்னோடு பேசுகின்றிலள் என்றபடி. |
(இ - ள்.) காவி ஆகின்ற - குவளைமலர் போன்ற, கரு மா மழைக் கண்ணி - கரிய பெரிய மழைபோன்ற கண்ணையுடைய இச் சுயம்பிரபையோ வெனில், மேவி யான் உண்ணும் - பொருந்தி யான் நுகர்கின்ற, அமிர்தாய் - அமிழ்தமாய், விருந்து ஆகி - மேலும் மேலும் புதுமையுடைய பொருளாய், ஆவியாய் - என் ஆருயிரேயும் ஆய், அருமருந்தும் ஆகின்றாள் - பெறற்கரிய மருந்தும் ஆவாளாகவும், பாவியேன் - பாவமுடைய யானோ, |