பக்கம் : 71
 

காதல்தீ வளர்க்குங் காளைப்பருவம்

84. திருவளர் 1செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்
உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார்.
 

     (இ - ள்.) திருவளர் செல்வர்மேல் - அழகுமிக்க அரசிளங்காளைகளின்மேல்; சென்ற
சிந்தை நோய் - செல்லுகின்ற மனநோயாகிய காதல்நோய்; ஒருவரின் ஒருவர் - ஒருவரைப்
பார்க்கினும் மற்றொருவர்; மிக்கு உடையர் ஆதலால் - மிகுதியாகக் கொள்வதனால்
அவ்விசயதிவிட்டர்; உருவளர் கொம்பனார் - அழகு வளரும் பூங்கொம்பைப்போன்ற
பெண்களின்; உள்ளம் காய்வது ஓர் - உள்ளத்தைச் சுடுவதாகிய ஒப்பற்ற; எரி
வளர்த்திடுவது - காதல்தீயை வளர்க்கத்தக்க; ஓர் இளமை எய்தினார் - சிறந்த
காளைப்பருவத்தை யடைந்தார்கள். (எ - று.)

     அந்த மங்கையர்கள் கொண்ட காமநோய் ஒருவரைப் பார்க்கினும் மற்றொருவருக்கு
மிகுதியாக இருந்தது. ஆகவே விசய திவிட்டர்கள், அம் மங்கையரின் காதல் தீயை
வளர்த்திடற்குரிய நல்ல இளமைப் பருவத்தையடைந்தார்கள் என்க.

( 15 )

அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்

85. மற்றொர்நா 1ளமரிகைக் கொடிகொண் மாமணிச்
சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்
முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்
கொற்றவ னிளையவர் குழைய வைகினான்.
 
     (இ - ள்.) ஒர்நாள் - ஒருநாள்; அமரிகை - அமரிகை என்னும் யாற்றின்கண்
தோன்றும்; கொடிகொள் மா மணிச்சுற்று - ஒழுங்குகொண்ட சிறந்த மணிமாலைகளைச்
சுற்றிய சுற்றினின்றும் எழும்; வான் சுடர் ஒளி தழுவி - சிறந்த பேரொளியாற் றழுவப்பட்டு;
சூழ்மலர்முற்றி - கட்டிய மலர் மாலைகளாற் சுற்றப்பட்டு; வண்டு இனம்விடா -
வண்டுக்கூட்டங்கள் அம் மாலையில் மொய்த்தலை விடாத; முடிகொள் சென்னி - முடியணியைக்
 

     (பாடம்) 1. மைந்தர்மேல். 2. நாண்மகரிகைக் கொடி; அமிரிகைக் குமைகொள்; அமரிகைக் கோடிள.