பக்கம் : 711 | | (இ - ள்.) வண்டே - வண்டுகளே நீவிர், மடந்தை - சுயம்பிரபையின், மணி யைம்பால் மேவி யிருந்து - நீலமணி போலும் நிறமமைந்த அளகத்தின் மிசை ஏறி இருந்து, உன் உண்டே என நுடங்கும் மருங்குல் - அல்குற்கும் முலைகட்கும் இடையே உளதாதல் வேண்டும் என்று கருதல் அளவையாற் கூறப்படும் ஒல்குதலையுடைய இடையை, நோவியீர் - வருத்தாதொழிமின், தண் தேன்தாள் - குளிர்ந்த தேன் இனங்காள், நீரும் - நீவிரும், தளிர் மேனி நாற்றத்தால் - இவளுடைய மாந்தளிர் போன்ற திருமேனியின் நறுமணத்தை விரும்பி, பண்டே போல் - முன்காலத்தே போன்று, வந்துபயிலாது போமின் - வந்து மொய்த்திடாது அகலப்போமின், (எ - று). பண்டன்று பட்டினம் காப்பு என்றாற்போன்று இன்று அவள் திருமேனி எம் காவற்கண்ணதாகலின், பண்டுபோல் வந்து பயிலேன் மின் என்றான் என்க. வண்டுகாள் ! இவள் இடை நுண்ணிதாகலின், ஐம்பான் மேவி, அதனை இழக்குமாறு செய்யேன்மின், தேன்காள் இவள் மேனி நாற்றம் நுகர்வான் யானுளன், மணமாகாத பண்டுபோல் எண்ணி அந்நறுநாற்றத்தை விரும்பி வந்து பயிலேன்மின் என்றான் என்க. | ( 294 ) | தன்னெஞ்சிற் குரைத்தல் | 1121. | கள்ள மடநோக்கி தன்னைக் கரந்தென துள்ளத்தின் வைப்பி னுருவமது காணேன் மெள்ளவென் றோளணைவா ளென்னும் விருப்பாரா தெள்ளு மனத்தினுக் கெய்திற் றறியேனே. | (இ - ள்.) கள்ளம் மடநோக்கி - கள்ளநோக்கும் மட நோக்கும் உடைய இவள், தன்னைக் கரந்தெனது உள்ளத்தின் வைப்பின் - தனது உருவத்தை என் நெஞ்சத்தின்கண் மறைத்து வைத்தாள் எனில், அது காணேன் - அவ்வுருவத்தை யான் காணாதொழிந்தேன், தன்கண் இவள் இருப்பவேயும் அஃதறியாது, மெள்ள என்தோள் அணைவாள் - மெல்ல வந்து என் தோள்களிலே பொருந்துவாள், என்னும் - என்றெழுகின்ற தன், விருப்புஆரா - விருப்பத்தை இந்நெஞ்சம் ஒழிக்கின்றிலது, எள்ளும் என் மனத்தினுக்கு எய்திற்று அறியேன் - எள்ளத் தகுந்த என் நெஞ்சுக்கு இயன்றதொரு பேதைமை இத்தன்மைத்தென்று யான் அறிகின்றேனில்லை, (எ - று.) நங்கை தன் நெஞ்சத்தின் கண்ணளாகவும் அதுமேலும் அவளை அணைய விழைந்து தன்னை அலைத்தற்குரிய பேதைமைத் தன்மையை என்னென்பது என்றான், என்க. இஃது ஊடல் உணர்த்துவான் தன் னெஞ்சிற்குக் கூறியது, | ( 295 ) | | |
|
|