(இ - ள்.) காதலால் வந்து என் கவான்மேல் இருப்பினும் - இவள் என்பால் நிறைந்த காதலுடையாளாய் எம்பால் வந்து எமது தொடைமேல் அமர்ந்து இருப்பாளாகவும், இமைப்பின் ஏதிலாள்போலும் - இவளழகைப் பருகும் என் கண்களைச் சிறிது இமைத்துப்பின் நோக்குவேனாயின், அத்துணைக்கே இவள் அயலிடத்தவள் போன்று ஆகிவிடுகின்றாள் , ஆற்றாமை மிகுவதாம், இமையாதே போதுலாம் வாண்முகமே நோக்கிப் பொலிவேன் - அங்ஙனமாதல் பொறாமல் இவள் தன் ஒளிமிக்க முகத்தை இமையாதே பார்த்துப் பொலிவுடையேன் ஆவேன் எனிலோ, என் மாதராள் - என் காதற்கினிய இம்மடந்தை, நாணும் - அங்ஙனம் யாநோக்குதற்கு இவள் பெரிதும் நாணாநின்றாள், இவ்வாறாகலின், யான் வாழுமாறு ஓரேன் - இமைக்கவும் இயலாது இமையாதே நோக்கவும் இயலாமையின் இவ்விரு நிலையும் விட்டு யான் இனிது வாழும் ஒரு நிலையை உணர்கின்றேனில்லை, (எ - று.) இவளழகை நோக்குங்கால், இடையே இமைத்து நோக்குதலும், எனக்கு ஆற்றாமை உண்டாக்கும்; அதற்கஞ்சி, இமையாது நோக்கின் இவள் நாணா நின்றாள்; இமையாதும், இமைத்தும், இருக்கின்ற இந்நிலையிரண்டினும் வேறாய நிலையும் அறிகின்றிலேன்; யான் என்செய்கோ ! என்றான், என்க. |
(இ - ள்.) உலம் பாராட்டும் தோளவன் - திரள்கல்லை ஒக்கும் என்று புகழப்படும் தோள்களையுடைய திவிட்டநம்பி, ஒண்பூங்குழலாளை - ஒளியுடைய மலர்சூட்டப்பட்ட குழலையுடைய சுயம்பிரபையை, நலம் பாராட்டி - இங்ஙனமாக நலங்களைப் பலபடப் புகழ்ந்துகூறி, நாகிளமுல்லை நகுவிக்கும் - மிக்க இளமையை யுடைய முல்லையை மலர்விக்கும், வலம் பாராட்டி வந்ததோர் - வலம் ஏறி வந்ததாகிய ஒப்பற்ற, மாரிப் புயல்ஒத்தான் - கார்ப் பருவத்து மேகத்தை நிகர்த்தான், குலம் பாராட்டும் கொம்பும் - தன் |