(இ - ள்.) தண்டார் ஈன்று - குளிர்ந்த மலர் மாலைகளைப் போன்று பூத்து; செந்தளிர் ஏந்தி - சிவந்த தளிர்களைத் தாங்கி, தழல்பூத்த - நெருப்புப் பிழம்பைப் போன்று மலர்ந்துள்ள, வண்டுஆர்பிண்டி - வண்டுகள் மொய்க்கின்ற அசோகமரத்தின், வார் தளிர் நீழல் - நீண்ட தளிர்களானாய நிழலின்கண் அமைந்த, மணிவட்டம் கண்டு - மணிகளாலியன்ற வட்டவடிவிற்றாய மேடை ஒன்றைக் கண்டு, காரிகையோடு ஆங்குஏறி - சுயம்பிரபையோடே அம்மேடைமிசை ஏறி, விளையாடி - ஆடி, பண்தான்கொண்ட பாவையர் பாடல் இசை கேட்டான் - பண் அமைந்த மகளிர்களின் இசைப்பாடலைக் கேட்டின்புற்றான், (எ - று.) தார் ஈன்று - மாலைதொடுத்தாற் போன்று மலர்களை ஈன்று என்றவாறு. அங்ஙனம் பூம் பொழிலிலே புக்கவன், பிண்டி நீழலிலே மணிவட்டங்கண்டு, அதன் மிசையேறி நங்கையோடே ஆடிப் பாவையர் பாடலிசையை நுகர்ந்தான்; என்க. |
(இ - ள்.) தேமாவே - தேமாமரமே; வரைவேந்தன் மடமகளை - சுவலனசடி மன்னனுடைய மடமிக்க மகளாகிய சுயம்பிரபையினுடைய, மணியேர் மேனி நிறங்கொண்டு - மாணிக்கத்தைப் போன்ற அழகிய திருமேனியின் நிறத்தை ஒப்பாகக் கொண்டு, விரையேந்து தளிர்ஈனல் விழையாய் - மணம்பொருந்திய தளிரை ஈனுதலை விரும்பாதே கொள், விரையேந்து தளிர் ஈனில் - மணம் பொருந்திய தளிரை ஈனுவாயாயின், தேமாவே - தேமாமரமே கேள், நீயே - நீதான், வேனில்தென்றல் அலர்தூற்ற நிரையேந்து வடுப்படுதி - இளவேனிற் பருவத்துத் தென்றல் உன்னுடைய பழியை உலகில் தூற்றாநிற்ப நிரலாக மிகுந்த அம்மாறாப்பழியை அடைவாய், வாழி : முன்னிலையசை. (எ - று.) சுயம்பிரபையின் நிறத்தைப் போன்ற தளிர் ஈனக்கருதி நீ தளிர்ப்பாய் எனினும் அத்தளிர்கள் அவள் நிறத்தை ஒவ்வா ஆகலின் இப்பழியைத் |