பக்கம் : 721
 
 
1136. விஞ்சைய ருலக மெல்லாம் வெய்துற விரிந்த மாற்றம்
அஞ்சினன் மறைத்துச் சின்னா ளமைச்சரி மஞ்சு வென்பான்
வஞ்சனைச் சீய மாய வார்கழ லவனைக் கூவி
எஞ்சலில் புகழி னானுக் கின்னண 1மிசைப்பித் தானே.
 

     (இ - ள்.) விஞ்சையர் உலகம் எல்லாம் வெய்துற - விச்சாதரருலகமெங்கும்
அஞ்சும்படி, விரிந்த மாற்றம் - பரவிய இச்செய்தியை, எஞ்சல் இல் புகழினானுக்கு -
குறைதலில்லாத புகழுடைய அச்சுவகண்டனுக்குக் கூற, அமைச்சு அரிமஞ்சு என்பான் -
அமைச்சுத்தொழில் பூண்ட அரிமஞ்சு என்பவன், அஞ்சினன் - அஞ்சியவனாய், சின்னாள்
மறைத்து - சிலநாள்வரை மறைத்து வைத்துப் பின்னர், வஞ்சனைச் சீயம் ஆய
வார்கழலவனைக் கூவி - மாயச்சிங்கமாகிச் சென்றவனாகிய நீண்ட வீரக்கழலணிந்த
அரிகேதுவை அழைத்து, இன்னணம் இசைப்பித்தான் - இவ்வாறு அச்சுவகண்டனுக்கு
உரைக்கும்படி ஏவினான்,
(எ - று,)

வார்கழலவன் - அரிகேது. புகழினான் - அச்சுவகண்டன். விச்சாதரர் உலகமெல்லாம்
நடுங்குமாறு விரிந்த இச் செய்தியைச் சின்னாள் மறைத்துப் பின்னர், அரிமஞ்சு,
அரிகேதுவைக் கூவி, இவ்வாறு கூறுவித்தான், என்க.
 

( 6 )

திவிட்டன் அரிமாவைக் கொன்றமைபற்றி
விஞ்சையருலகிற் பட்டமை வினாதல்

1137. சொரிகதிர் வயிரப் பைம்பூ ணரசர்கள் பலருஞ் சூழ
எரிகதி ராழி யாள்வா னினிதினிங் கிருந்த போழ்தின்
அரியது கேட்க வென்ன வரிகேது வென்பா னாங்குப்
பெரியதோர் வியப்புச் சென்று பட்டது பேசி னானால்.
 
     (இ - ள்.) சொரி கதிர் வயிரப் பைம்பூண் அரசர்கள் பலரும் சூழ - வீசுகின்ற
சுடரையுடைய வயிரத்தாலாய பசிய அணிகலன் அணிந்த பல மன்னர்களும் சூழ, எரிகதிர்
ஆழியாள்வான் - சுடர்வீசும் ஆழிப்படையை ஆளுகின்ற அச்சுவகண்டன், இங்கு இனிதின்
இருந்தபோழ்தில் - இவ்விடத்தே இனிதாகக் கொலுவீற்றிருந்ததோர் அமையத்தே, அரியது
கேட்க என்ன - அரசர் பெருமான் கேட்டற்கரிய செய்தி ஒன்றை இப்போது யான் கூறக்
கேட்டருள்க என்று கூறத் தொடங்கி, அரிகேது என்பான் - அரிகேது என்பவன், பட்டது
பேசினான் - திவிட்டன் சிங்கத்தை வாய்பிளந்த செய்தியைக் கூறலானான், ஆங்கு -
அவ்விடத்தே, பெரியதோர் வியப்புச் சென்றது - அவ்வவையில் மிகப் பெரியதொரு வியப்பு
உண்டாகியது,(எ - று.) 

 


     (பாடம்) 1மிசைப்பித.