(இ - ள்.) அடிகள் இவ்வவனி தன்மேல் இழிந்ததும் - பெரியீர் இப் போதன நகரத்தே வந்து இறங்கியதும், அணங்கோடு ஒப்பாள் - தெய்வமகள் போன்ற சுயம்பிரபையின், கடிவினை நிலையும் - திருமண நிகழ்ச்சியின் தன்மையும், கண்டு வந்து ஒருவன் அன்றே கூற - பார்த்து வந்து ஓர் ஒற்றன் அந்நாளிலேயே அச்சுவகண்டனுக்குக் கூறினானாக, சுடுசொல் இஃது ஒழிக என்று - அவன் என் செவிகளைச் சுட்டொழிக்கும் இக் கொடுஞ்சொல்லை இனிக் கூறாதொழிக என்று கூறி, துணைச்செவி புதைத்து - இரு செவிகளையும் கைகளாலே பொத்திக்கொண்டு, முடிமுதல் துளங்கத் தூக்கி - முடியின்கண் அசைவுண்டாகத் தன் தலையை நிமிர்த்து, முனிவினை முடிவு கொண்டான்-வெகுளியின் எல்லையை யடைந்தான், (எ - று.) முனிவினை - வெகுளி. மற்றோர் ஒற்றன், இப்போதனத்தே நிகழ்ந்த நங்கை திருமண நிலையும், பிறவும் அன்றே கூற, அச்சுவகண்டன் செவி புதைத்து, இத்தகைய சுடுசொல்லை இனி யான் பொறேன்! ஒழிக என்று, எல்லைகடந்து வெகுண்டான், என்க. |
(இ - ள்.) பெருகினான் வெகுளி - இவ்வாறு சினம் மிகுந்தான், கண்ணுள் பிறங்கு செந்தீப் பிறந்தது - கனலும் செவ்விய நெருப்பு அவன் கண்களிலே தோன்றிற்று, உருகினான் போன்று தோன்ற - அச் சினத்தீயால் உடல் உருகினவனைப் போன்று தோன்றுவானாய், திருகினான் - திரும்பினான், மயிர்த்துளை தெண்ணீர் உகுத்த - மயிர்த்துளைகள் வியர்வை நீரைப் பொழிந்தன, எயிறு செவ்வாய் கறித்தனன் - பற்களால் செவ்விய வாயை மடித்துக் கடித்தான், திசைகளோடும் அருகினோர் நடுங்க நோக்கி - எட்டுத் திசையினும் தன் பக்கலினும் இருந்தோர் அனைவரும் நடுங்கும்படி பார்த்து, அழல் நகை அடுத்து நின்றான் - நெருப்புதிர்க்கும் சினச்சிரிப்புச் சிரித்து நிற்பானாயினான், (எ - று.) |