பக்கம் : 73
 

உடற் பாதுகாப்பாளர்கள்

87. மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன்
றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
அன்னவ ரடிமுதற் 1காவ னண்ணினார்.
 

     (இ - ள்.) மன்னவன் - பயாபதி யரசனானவன்; துயில் விடுத்து அருள - உறக்கம்
நீங்கியருளவும்; பொன்துன்னிய உடையினர் - பொன்னால் வேலைப்பாடுகள் செய்யப்பெற்ற
உடுப்புக்களை யணிந்தவர்களும்; துதைந்த கச்சையர் - அழுத்தமாகக் கட்டப்பெற்ற
கச்சையை உடையவர்களும்; பின்னிய ஞாணினர் - பின்னப்பட்ட அரைஞாண்
அணிந்தவர்களும்; பிடித்த வில்லினர் - கையிலே பிடிக்கப்பெற்ற வில்லையுடையவர்களும்
ஆகிய; மைந்தர் - அரசனுடைய உடற்பாதுகாப்பாளர்கள்; அன்னவன் அடிமுதல் -
அரசனுடைய அடிகளினிடத்திலே நின்று; காவல் நண்ணினார் - காத்தல் தொழிலைச்
செய்யலானார்கள். (எ - று.)

     பயாபதி மன்னன் உறக்கம் நீங்கினான். மெய்காப்பாளர்கள் தங்கட்குரிய
உடுப்புக்களை உடுத்திக் கையில் வில்லைப் பிடித்தவர்களாய் அரசன் அண்மையில் நின்று
அரசனுக்கு எத்தகைய ஊறுபாடும் நேராதபடி பாதுகாக்கத் தொடங்கினார்கள். துயில்
விடுத்தருள - என்பதற்கு உறக்கத்தை யொழித்தருளும் அளவும் என்று பொருளுரைத்து,
அரசன் உறங்கியபோதும் மெய்காப்பாளர்கள் காவல் புரிந்ததாக உரை கூறினாரும் உளர்.

( 18 )

திருப்பள்ளி எழுச்சி

88. தங்கிய தவழொளி தடாவி வில்லிட
மங்கல வுழைக்கல மருங்கு 2சேர்ந்தன
அங்கவன் கண்கழூஉ வருளிச் 3செய்தனன்
பங்கய 4முகத்தர்பல் லாண்டு கூறினார்.
 
     (இ - ள்.) தங்கிய - பொருந்திய; தவழ்ஒளி - பேரொளி; தடாவி
வில்இட - மருங்குகளிற் பொருந்தி ஒளியைச் செய்யுமாறு; மங்கலம் உழைக்கலம் - மலர
பொன் மணி கண்ணாடி முதலிய மங்கலப் பொருள்கள்; மருங்கு சேர்ந்தன - அரசனுடைய
படுக்கைக்கு அருகிற் சேர்க்கப்பெற்றன;
 

     (பாடம்) 1. கரவ. 2. சேந்தன. 3. செய்த நன். 4. முகத்தவர்.