(இ - ள்.) இனி இருந்து என்னை பாவம் - இனியும் செய்வன செய்யாமல் வாளாவிருப்பதிற் பயன் என்னாம், இஃதொரு பாவமாயிற்று, எழுமின் போய்ப் பொருதும் என்பார் - புறப்படுங்கோள் சென்று போர்புரிவோம் என்று கூறுவர் சிலர், முனிவன செய்த வேந்தன் - நம் அரசன் சினப்பதற்குரிய செயலைச்செய்த திவிட்டனுடைய, முடித்தலை கொணர்தும் என்பார் - முடிக்கலனையுடைய தலையை இன்னே கொண்டு வருவோம் என்று சிலர் இயம்புவர், கனிவளர் கிளவியாளைக் கைப்பற்றித் தருதும் என்பார் - கற்பகக்கனி போன்று இனிமையை வளர்க்கின்ற மொழியையுடைய சுயம்பிரபையைப் பிடித்துக்கொண்டு வந்து நம்மரசனுக்குக் கொடுப்போம் என்பர் ஒரு சிலர், பனிவளர் அரசர் மாற்றம் பற்பல - உள் நடுக்கமுடைய அவ்வரசர் இவ்வாறு சொல்லளவானே பேசிய மறமொழிகள் பற்பலவாம், பரிதிவேலோய் - கதிரவனைப்போன்று ஒளிவிடும் வேற்படையை உடைய வேந்தர்பெருமானே, (எ - று.) பரிதி வேலோய் என்றது, ஒற்றன் சடியை விளித்த தென்க. இருந்தென்னை, எழுமின், போய்ப் பொருது மென்பாரும், முடித்தலை கொணர்தும் என்பாரும், கிளவியாளைப் பற்றித் தருதும், என்பாருமாய் அவர் பேசிய மாற்றம் பற்பல என்றான், என்க. |