(இ - ள்.) சினம் எனப்பட்ட தீயுட் பிறந்தது - வெகுளி என்று கூறப்பட்ட நெருப்பின்கண் தோன்றியதும், செருக்கு நல்நீர் மனம் உணவு உண்டு - மதம் என்னும் நல்ல நீரையும் மனம் என்னும் உணவையும் உண்டதும், மானப்பூ நின்ற அனலது வயிர ஒள்வாள் ஒன்று அகத்ததாக - மானமாகிய கூர்மை நிலைத்து நிற்கப்பட்டதும் அனல்போலும் பகைவரை அழித்தற்குக் காரணமானதும் ஆகிய இகல் என்னும் ஒளியுடைய வாள் ஒன்று தன் உள்ளத்தே உளதாக, ஆரமர் குருதி வேட்டு - பொருந்துகின்ற போரின்கண்ணே பகைவர் தம் செந்நீரை விரும்பி, கனல்வதோர் - புறத்தே தன் கையகத்திருந்து கனல்கின்றதும், கால ஒள்வாள் - கொலைத் தொழிலில் மறலியை ஒத்ததும் ஒளியுடையதும் ஆகிய தன் வாளை, கடைக்கணித்து - கடைக்கண்ணால் பார்த்து, ஒருவன் சொன்னான் - கனகசித்திரன் என்னும் ஒரு மறவன் கூறுவானாயினன், (எ - று.) கனகசித்திரன் என்பது 1169 ஆம் செய்யுளிற் காணலாம். சினத்தீயிலே பிறந்து, செருக்கு நீரையும், மன வுணவையும் உண்டு, உருப்பெற்ற மறமென்னும் ஒளிவாள், தன் அகத்தே உளதாக, தன் கைவாளைக் கடைக்கணித்து நோக்கி, ஒரு மறவன் கூறினான், என்க. பகை மனத்தை விழுங்குமியல்புடைத் தாகலின் மனவுணவு வுண்டு என்றார். வயிரம் - ஈண்டு இகல். |
(இ - ள்.) தோள்களைப் புடைத்து வீக்கி - தம் தோள்களிற் றட்டி அவற்றைப் பரியவாய்க் காட்டி, துணைக்கரம் கொட்டி - இரு கைகளையும் புடைத்து, ஆர்த்து - ஆரவாரஞ்செய்து, வாள்களைத்துடைத்து - தம் வாட்படைகளைத் துடைத்து, நோக்கி - அவற்றைக் கூர்ந்து பார்த்து, வகைசெய்தல் யார்க்கும் எளிது - இவ்வகைச் செயல்களைச் செய்தல் எல்லோருக்கும் செய்யலாம் எளிய செயலே, நீள்கதிர் இமைக்கும் ஒள்வாள் |