அங்கு அவன் - அப்பொழுது பயாபதி மன்னன்; கண் கழூஉ அருளிச் செய்தனன் - எழுந்து கண்களைக் கழுவியருளினான்; பங்கய முகத்தர் - தாமரை மலர்போன்ற முகத்தையுடைய பெண்கள்; பல்ஆண்டு கூறினார் - அரசன் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துப் பாடினார்கள். (எ - று.) அரசன் படுக்கையைவிட்டு எழுந்தான். உறங்கி விழித்தவுடன் பார்த்தற்குரிய மங்கலப்பொருள்கள் அரசன் கண் விழிப்பதற்கு முன்னரே அவனுக்கு அண்மையில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தன. படுக்கையைவிட்டெழுந்த அரசன் கண்களைக் கழுவிக்கொண்டு அந்த மங்கலப் பொருள்களைப் பார்த்தருளினான். மங்கையர் பல்லாண்டு பாடினார்கள். நடத்துதல் என்பது நடாத்துதல் என்று விகாரப்படுவதைப்போல் தடவி எனற்பாலது தடாவி என விகாரப்பட்டது. தடாவி - வளைந்து எனினுமாம். கழுவு என்னும் முதனிலைத் தொழிற் பெயர் கழூஉ என விகாரப்பட்டு அளபெடுத்தது சொல்லிசை யளபெடை. |
( 19 ) |
அந்தணர் வாழ்த்துக்கூற அரசன் அவர்களை வணங்குதல் |
89. | அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப் பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார் செந்துணர் 1நறுமலர் தெளித்துத் 2தேவர்மாட் டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான். |
(இ - ள்.) அந்தணர் - அழகிய தண்ணளியையுடையவர்களாகிய முனிவர்கள்; ஆசு இடைகூறி - வாழ்த்துரைகளை இடையிடையே கூறி; ஆய்மலர்ப் பைந்துணர் - அழகிய மலர்கள் பொருந்திய பசிய பூங்கொத்துக் களை; நெடுமுடி பயில ஏற்றினார் - நெடியமுடியிலே பொருந்துமாறு போட்டார்கள்; இந்திரன் அனையவன் - தேவர்கோமானைப் போன்றவனாகிய பயாபதி மன்னனும்; தேவர்மாட்டு - தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகிய அம்முனிவர்களிடத்திலே; செம்துணர் நறுமலர் தெளித்து - அழகிய கொத்தாகவுள்ள நறுமலர்களைத் தூவி; இறைஞ்சி ஏத்தினான் - வணங்கிப் போற்றினான். (எ - று.) அந்தணர்க்குத் தேவர் உவமை எனினுமாம். |
|
|
(பாடம்) 1. நறுமலர் தானுந். 2. தேவன்மாட்டு. தேனமாட்டு. |