பக்கம் : 740
 

     முகம்பெற - இனி நீண்ட சுடர் விளங்கும் ஒளியுடைத்தாய வாட்படைக்கு எதிர்ப்பட்டு, நெருப்புச் சிந்தி - சினத்தீயைச் சொரிந்து, தாள்களை வெதுப்பும் - கால்களைத் துன்புறுத்துவதாகிய, வெம்போர் - வெவ்விய போர்த்தொழிலை, தாங்குவது - மேற்கொண்டு ஆற்றுவதே, அரியதென்றான் - செயற்கரிய செயலாம் என்றான், (எ - று.)

போர்க்களத்தே துணிந்து நிற்றலும் அன்றிப் புறங்கொடுத் தோடலும், தாள்களின் செயலாகலின், தாள்களை வெதுப்பும் வெம்போர் என்றான்.

தாள் - பகைவரது முயற்சியுமாம்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்Ó என்றான், என்க.
 

( 36 )

 

1167. தானவ 1ரெனினு மிப்போ ரிழந்துபோய்த் தரணி வாழும்
ஊனம ருலக மாளு மூழியொன் றிதுவன் றாயில்
வானவ ருலகு மண்ணும் வந்துநின் வாயில் பற்றி
ஈனமொ டுறக்கங் காட்டி யிடுவன்யான் றெளியி தென்றான்.
 
     (இ - ள்.) தானவர் எனினும் - நம்போன்ற வித்தியாதரர்களே அவர்க்குத்
துணையாவார் என்றாலும், தரணிவாழும் ஊன் அமர் உலகம் - நிலத்தின் கண்ணே
வாழுகின்ற ஊன் பயில் குரம் பைத்தாம் மக்கள் கூட்டம், இப்போர் இழந்துபோய் - இந்தப்
போரின் கண்ணே அழிந்து, மாளும் ஊழி ஒன்று இது - இறந்து ஒழியும் ஓர் ஊழிக்காலமே
இதுவாதல் வேண்டும், அன்றாயில் அங்ஙனமாகாது அவர் போர்க்கு அஞ்சுவாராயின், வானவர் உலகும் மண்ணும் வந்து - அமரர்களும் அம்மண்ணுலகத்தாரும் உன்பால்
சரண்புக வந்து, நின் வாயில்பற்றி - செவ்விபெறாது உன்னுடைய தலைவாயிலிற்கிடந்து,
ஈனமொடு உறக்கம் - இளிவரவுடனே உறங்குதலை, யான் காட்டி யிடுவன் - யான்
உனக்குக் காட்டா நிற்பேன், இது தெளி என்றான் - இங்ஙனம் யான் செய்தல் உறுதி
என்பதை நீ நன்கு தெளிந்துகொள்க என்று கூறினான், (எ - று.)
தானவர் - அசுரருமாம்.

மானிடர் உனக்குப் பகையாயதன் காரணம், அம்மானிட இனம் அழிந்தொழியும் ஊழியே
வந்துற்றதாதல் வேண்டும், அஃதின்றேல், அமரரும் உன் பகைவரும் உன்னிடத்தே தஞ்சம்
புகவந்து, உன் தலைவாயில் பற்றி நிற்க யான் செய்வல் என்றான் என்க.
 

( 37 )


     (பாடம்) 1 ரேனு, ரென்னு.