பக்கம் : 741
 
 
1168. வாளினாற் செருவுண் டேனு மாயமற் றாகு மேனும்
தோளினா லாகு மேனும் செல்லெலா மொழிக மற்றக்
காளைதன் னுயிரி னோடுங் கன்னியைக் கொணர்ந்து தந்து
தாளிலே யிட்ட பின்றைத் தவிர்கநின் சீற்ற மென்றான்.
 

     (இ - ள்.) வாளினால் செருவுண்டேனும் - வாட்படையினாலே ஆற்றும் போர்
நிகழ்வதாயினும், மற்று மாயம் ஆகும் ஏனும் அஃதன்றி மாயத்தால் நிகழ்த்தும் போரே
ஆகும் எனினும், தோளினால் ஆகுமேனும் - தோள் ஆற்றலாலே நிகழ்த்தும் போரே
எனினும், சொல் எலாம் ஒழிக - அவைபற்றிப் பேசும் இவ்வீண் சொற்களை விடுக, மற்று
அக்காளை தன் உயிரினோடும் - இனி அத்திவிட்டனுடைய உயிருடனே, கன்னியைக்
கொணர்ந்து - சுயம்பிரபையையும் பற்றிக்கொண்டு வந்து, தாளிலே தந்து இட்ட பின்றை -
உன் அடிகளிலே காணிக்கையாக வைத்த பின்னர், நின் சீற்றம் தவிர்க என்றான் -
உன்னுடைய வெகுளி ஒழிக என்று இயம்பினான்,
(எ - று.)
மற்றெலாம் ஒழிக, காளையின் உயிரையும், கன்னியையும் உன் திருவடியிலே யான்
கொணர்ந்து இட்டபின்னர், உன் சீற்றம் விடுக என்றான், என்க.
 

( 38 )

 

1169. ஆளிகட் கரசன் 1பாங்கோர் குறுநரி யறிவில் 2லாது
மீளிமை பொறாது வெம்பி வெகுண்டெழு கின்ற தென்றால்
நாளினு நங்கள் போல்வார் நகைசெயப் படவ தன்றே
வாளொளி வயிர மின்னு மணிமுடி மன்னர் கோவே.
 
     (இ - ள்.) வாள் ஒளி வயிரம் மின்னும் மணிமுடி மன்னர் கோவே -
வாட்படையையும், சுடருடைய வயிரமணிகள் மின்னுகின்ற முடிக்கலனையும் உடைய
அரசர்க்கரசனே, ஆளிகட்கு அரசன் பாங்கு - அரிமாக்களுக்கு அரசனாகிய ஓர் அரி
ஏற்றின் முன்னர், ஓர் குறுநரி - ஓர் எளிய குள்ளநரி, அறிவில்லாது - அறிவில்லாமலும்,
மீளிமைபொறாது - அவ்வரியேற்றின் தலைமையைப் பொறாமலும், வெம்பி - பகைகொண்டு
மனம் வெம்பி, வெகுண்டு எழுகின்றது - சினந்து போர்செய்ய எழுந்தது என்றால், நங்கள்
போல்வார் - நம்மை ஒத்த வீரர்களால், நாளினும் - எப்பொழுதும், நகை
செய்யப்படுவதன்றோ, அப்பேதைமைச் செயல் நகைக்கப்படுவதொன்றன்றோ, (எ - று.)

அரியேற்றின் முன்னர், குறுநரி இகல்கொண்டு பொருதற் கெழுவது நகைவிளைக்குமன்றே!
அதுபோல, மனிதன் நின்னைப் பகைத்தலும் நகை தருகின்றது, என்றான் என்க.
 

 ( 39 )


     (பாடம்) 1 னாங்கோர். 2 லாதா.