(இ - ள்.) போது உலாம் அலங்கல் மார்ப - மலர்கள் பொருந்திய மாலையையுடைய வேந்தே!, ஆதலால் - அவ்வாறாதலால், ஆயில் - ஆராயுமிடத்தே, எங்களால் ஆவது - எம்மனோரால் ஆகற்பாலது, ஒன்று இல்லை - பிறிதொன்றுமில்லை, பொருவது பொருந்திற்று - போர்செய்தலே இப்பொழுது தக்கதாயிற்று, என்னும் - என்று கூறிய, காதலான் கனகசித்திரன் - மகனாகிய கனகசித்திரன் என்பானுடைய, கட்டுரையதனைக் கேட்டே - பொருன் பொருந்திய மொழிகளைக் கேட்டு, கோது இலா மாரி பெய்த - குற்றமில்லாத மழைபொழியப்பட்ட, கோடை அம்குன்றம் ஒத்தான் - கோடைக்காலத்து மலையை ஒத்தவன் ஆனான், (எ - று.) ஞாயிற்றின் வெப்பத்தாலே கொதித்து நின்ற குன்றம், பெரிய மழை பெய்தலாலே குளிர்ந்தாற் போன்று, திவிட்டன் பகையாலே கொதித்த அச்சுவ கண்டன், கனகசித்திரன் சொன்மாரியாலே சினந்தணிந்து மனங்குளிர்ந்தான்; என்பதாம். |
(இ - ள்.) மற்று அவன் உரைத்த போழ்தின் - கனகசித்திரன் இவ்வாறு கூறியவுடன், கொற்றவற்கு இளைய காளை - அச்சுவகண்டன் தம்பியாகிய காளைபோன்றவனும், கோல்தொழில் பாகம் பூண்டான் - செங்கோல் தொழிலாகிய அரசியலில் பாதியை மேற்கொண்டு நடத்துபவனுமாகிய, வச்சிரகண்டன் என்பான் - வச்சிரகண்டன் என்னும் பெயரையுடையவன் எங்கள் ஆண்மை இற்றதால் - எம்முடைய மறத்தன்மை அழிந்தொழிந்தது போலும், யாங்களும் இழிந்து நிற்ப - யாங்களும் இளிவரவுடையராய் நிற்கும்படி, செற்றதோர் படையுண்டாயிற்று - எம்பால் இகல்கொண்டதொரு படையும் உளதாயிற்றோ, என்று - என்று கூறி கண்சிவந்திட்டானே - வெகுண்டு கண்கள் சிவந்தான், ஏ : அசை, (எ - று.) |