பக்கம் : 744
 

     வெஞ்சினம் செருக்கி - வெவ்விய வெகுளியால் செருக்கடைந்து, இன்ன போல்வ
கூறினார் - இன்னோரன்ன மறவுரைகளைக் கூறினாராக, கூறலோடும் - அவர் அவ்வாறு
கூறியவுடன், குரை அழல் அவிவதேபோல் - ஓசையுடைய நெருப்பு (மழையால்)
அவிவதைப் போன்று, ஆறினான் - சினம் தணிந்தான், ஆய பண்பு அது - அவர்கள்
மொழியினாலாய பண்பாகும் அது, அது ஆனால் - அங்ஙனமானால், என்னை செய்யும் -
ஆறாதே அவ்வச்சுவகண்டன் பிறிது யாதுதான் செய்வன், (எ - று.)

அப்பொழுது ஆறுவதே அவன் பண்பிற்கொத்ததா யிருத்தலின் ஆறினான் எனினுமாம்.
அச்சுவகண்டன், தன் தம்பியரும், மக்களும் கூறிய மறவுரைகளைக் கேட்டுச்
சினந்தணிந்தான், என்க.
 

( 43 )

அச்சுவகண்டன் மறைபேசு மன்றம் புகல்

1174. அரசர்க ணெறியிற் கண்டீர்1
     யாம்பிழைப் பிலாமை யென்று
முரசென வதிரும் பேழ்வாய்
     முழங்கிசை மொழியிற் சாற்றி
வரைசெறிந் தனைய தோளான்
     மந்திர சாலை சேர்ந்தான்
உரைசெறிந் தங்குப் பட்ட
     சூழ்ச்சியு முணர்ந்து போந்தேன்.
 
     (இ - ள்.) அரசர்கள் நெறியில் யாம் பிழைப்பு இலாமை கண்டீர் என்று -
அரசர்களுக்குரிய நெறியிலே யாங்கள் தவறு செய்யாமையை நீயிர் நன்கு அறிந்துள்ளீர்
என்று, முரசென வதிரும் பேழ்வாய் முழங்கு இசையிற் சாற்றி - முரசைப் போன்று
முழங்குதலையுடைய தன் பெரிய வாயாலே முழங்கும் ஒலி மிக்க சொல்லாலே
அவ்வவையோரை நோக்கிக் கூறிவிட்டு, வரைசெறிந்தனைய தோளான் - இரண்டு மலைகள்
நெருங்கியதொத்த தோள்களையுடைய அவ்வச்சுவகண்டன், மந்திரசாலை - மறைபேசு
மன்றத்தை, சேர்ந்தான் - எய்தினான், அங்கு - அம்மறை மன்றத்தூடே, உரைசெறிந்து
பட்ட சூழ்ச்சியும் - மொழிகள் மிக்குத் தோன்றிய சூழ்ச்சியையும், உணர்ந்து போந்தேன் -
யான் ஒற்றி யறிந்துவந்துள்ளேன், (எ - று.)
யாம் அரசியனெறியிற் றவறினே மல்லேம் என்று கூறிவிட்டு அச்சுவகண்டன் மந்திரசாலை
புக்கான்; ஆங்கு நிகழ்ந்ததனையும், யான் ஒற்றி வந்துள்ளேன் என்றான், என்க. உணர்ந்து
போந்தேன் என்றது சடிமன்னன் ஒற்றன் கூற்று. இனி அச்சூழ்ச்சியைத் தான்
ஒற்றிவந்தபடியே சடிமன்னனுக்குக் கூறுகின்றான் என்க.
 

( 44 )


     (பாடம்)1 யாமிழைப்.