பக்கம் : 745
 

அரிமஞ்சு ஏனைய அமைச்சரை வினாதல்

1175. கன்னிதன் றிறத்துச் சீறிக் காவலன் கனலக் கண்டீர்
என்னினிக் கருதுகின்ற தென்றன னெரியு மாழி
மன்னவற் குணர்வுங் கண்ணு 1மாற்றமும் வலியுந் தோளும்
அன்னவ னமைச்சர்க் 2கேறா மவனரி மஞ்சு வென்பான்.
 

     (இ - ள்.) எரியும் ஆழி மன்னவற்கு - ஒளிருகின்ற ஆழிப்படையை யுடைய அச்சுவ
கண்டனுக்கு, உணர்வும் - அறிவும், கண்ணும் - கண்களும், மாற்றமும் - மொழிகளும்,
வலியும் - ஆற்றலும், தோளும் - தோள்களும், அன்னவன் - போன்றவனாகிய,
அமைச்சர்க்கு ஏறாம் அவன் - அமைச்சர்களில் ஆண் சிங்கத்தை ஒத்தவனாகிய,
அரிமஞ்சு என்பான் - அரிமஞ்சு என்னும் அமைச்சன், கன்னிதன் திறத்து காவலன் சீறிக்
கனலக் கண்டீர் - சுயம்பிரபையின் பொருட்டு நம் அரசன் சீற்றங்கொண்டு கனன்றதனை
நீவிர் கண்கூடாகக்கண்டீர், என் இனிக் கருதுகின்றது - அதுபற்றி யாம் இனி
ஆராயற்பாலது யாது கூறுங்கோள், என்றான் - என்று வினவினான்.

அச்சுவகண்டனுக்கு உணர்வும், கண்ணும், மாற்றமும், ஆற்றலும், தோள்களும்
போன்றவனாகிய அரிமஞ்சு என்னும் அமைச்சர் தலைவன், மற்றையோரை என் இனி யாம்
கருதுகின்றது? என்று வினவினான், என்க.
 

( 45 )

புகைக் கொடியோன் புகலல்

1176. அணிநகர் மேக கூட மதனையாண் டரிய செய்கை
துணிபவன் றூம கேது 3சூழ்ந்தனன் சொல்ல லுற்றான்
மணிவரைப் பிறந்து மாண்ட வருங்கல மன்னர் கோமான்
பணிவரை யன்றி யாரே பெறுபவர் பகர்மி னென்றான்.
 
     (இ - ள்.) மேககூட அணிநகர் - அதனையாண்டு அரிய செய்கை துணிபவன் -
மேககூடம் என்னும் அழகிய நகரத்தை ஆள்பவனும், ஆராய்ந்து காண்டற்கரிய
செயல்களைத் தன் மதி நுட்பத்தால் ஆராய்ந்து தெளியவல்லவனும் ஆகிய, தூமகேது -
தூமகேது என்பவன், சூழ்ந்தனன் - ஆராய்ந்து, சொல்லலுற்றான் - சொல்லத்
தொடங்கினான், மணிவரைப் பிறந்து மாண்ட அருங்கலம் - அழகிய மலையிடத்தே
தோன்றி மாட்சிமைப்பட்ட பெறற்கரிய அருங்கலம் ஒன்றனை, மன்னர் கோமான் பணிவரை
அன்றி - நம் அரசர் பெருமானாகிய அச்சுவகண்டனுடைய அணிகலனுடைய மலைபோன்ற
மார்புபெறுவதல்லது, யாரே பெறுபவர் பகர்மின் என்றான் - பிறர் யாவரே
அடைதற்குரியார் ஆவார், ஆராய்ந்து கூறுங்கள் என்றான்,
(எ - று.)
 

     (பாடம்) 1 மாற்றலும். 2 கென்றாம். சொல்லுவானென்னை, சொன்னான், சொல்லினான்.