(இ - ள்.) மல்லினால் மலர்ந்த மார்பீர் - மற்போர் பயின்று அகன்ற மார்பினையுடையவர்களே, நாம் மறைந்து இருந்து - நாம் நம்மரணுள் ஒளிந்து வதிந்தபடியே, வல்லசொல்லினால், வெல்லலாமேல் - வன்மையுடைய சொற்களைப் பேசுந்துணையானே நம் பகைவரை வெல்லக்கூடுமேல், இன்னும் சொல்லுமின் - மேலும் எத்துணையும் பேசுங்கள், அன்றி - அவ்வாற்றான் அல்லாமல், வில்லினால் விரவுதானைச் செருவினுள் - விற்படையோடு கலத்தலையுடைய போரின்கண்ணே, வீரந்தன்னால் - மறத்தாலேதான், வெல்லலாம் என்னில் - பகைவரை வெல்லுதல்கூடும் என்பது இயல்பானால், என்னைவிடுமின் - என்னைப் போர் ஆற்றுதற்குச் செல்ல விடை தரக்கடவீர், போய்ப் பொருவல் என்றான் - யானேபோய்ப் போர் செய்வேன் என்றான், (எ - று.) அங்காரவேகன், மார்பீர்! சொல்லால் வெல்லலா மென்னில், இன்னும் சொல்லுமின்; வில்லாலே வெல்லலாம் என்னின், எனக்கு விடைதம்மின்; யான்போய்ப் பொருவல் என்றான், என்க. |
(இ - ள்.) அரசர்க்கு - வேந்தர்கட்கு, நீதி - பகை வெல்லற்கு வகுத்த நீதியாதல், பொருதல் வேண்டா - பகைமன்னர்பாற் படைகொடு சென்று போர் ஆற்றுதல் வேண்டற்பாற்றன்று, பொருந்த நோக்கி - தன் வலியும் மாற்றான்வலியும் துணைவலியும்இடம் கால முதலியவற்றின் தகுதியும் ஏற்புடையவாதலை நன்குநோக்கி, ஆவது காண்டல் - தமக்கு ஆவனவற்றை அறிதலாகிய, சூழ்ச்சியே ஆகும் - சூழ்ச்சிவன்மையே அவரை |