பக்கம் : 750
 

     அப்படி வினவுவீராயின் கேளுங்கோள், அறிந்தவர் அறைந்த ஆறு என்று - போர்
நூலறிந்த மேலோர் ஓதியுள்ள போர் நெறிகளை என்று, எடுத்து எடுத்து இயம்புகின்றான் -
எடுத்து எடுத்துப் பேசலானான், (எ - று.)

“எடுத்தெடுத்து என்னும் அடுக்கு இழித்தற்கண் வந்த குறிப்பு அரசே, இப் படைநிலைமை
ஓரான் என்று கூறியது, சடிமன்னனை விளித்து ஒற்றன் கூறியதாம். திருநிலையகம் என்பது
சிறிசேனன் தலைநகர். பயாபதியின் திருநிலையகம் இதனின் வேறு. கருடத்துவசன்
வினாவிற்குச் சிறீசேனன் விடை கூறுகின்றான், என்க.
 

( 52 )

சிறீசேனன் போர் வகை புகலல்

1183. பொருபடைத் தொகையோர் மூன்று
     போர்த்தொழி றானு மூன்றே
மருவுடை 1மனுடந் தெய்வ
     மிருமையு மென்ன மற்ற
வெருவுடைப் படையின் குப்பை
     மேலது நான்கு வீற்ற
திருபடை யொழிந்து நின்ற
     விவையும்பாங் குடைய வென்றான்.
     (இ - ள்.) பொருபடைத்தொகை ஓர்மூன்று - போர் செய்தற்குரிய படைக்கலன்களின்
தொகை ஒருமூன்று என்ப, போர்த்தொழில் தானும் மூன்றே - அப்படைக்கலன்களைக்
கொண்டு ஆற்றும் போர்த் தொழிலின் தொகையும் மூன்றேயாகும் என்ப, மருவுடைமநுடம்
தெய்வம் இருமையும் என்ன - அம்மும்மை யாவையோவெனில், குற்றமுடைய மனிதப்
படைக்கலன் தெய்வப் படைக்கலன், இருமையும் கலந்த படைக்கலன் என்பனவாம்,
அவ்வெருவு உடைப்படையின்குப்பை - மேற்கூறப்பட்ட அச்சத்தைத்தரும் அம்முவ்வகைப்
படைத்திரளாள் வைத்து; மேலது - மேனின்ற மானிடப்படை, நான்குவீற்றது - நான்கு
கூறுகளை யுடையதாம்; ஒழிந்துநின்ற இருபடையினையும் - எஞ்சிநின்ற தெய்வப்படை,
கலப்புப் படை என்னும் இப்படைக்கலன்களும், பாங்கு உடைய - தம்முள் கூறுபாடுடையன;
என்றான் - என்று கூறினான், (எ - று.)

படைக்கலன், மனிதப் படைக்கலம் தெய்வப் படைக்கலம் கலப்புப் படைக்கலம் என மூன்று
வகைப்படும். போர்த்தொழிலும், மனிதப் போர் தெய்வப் போர் கலப்புப் போர் என மூன்று
வகைப்படும். அவற்றுள் மனிதப் படைக்கலம் நான்கு வகைப்படம். ஏனைய தெய்வப்
படைக்கலமும் கலப்புப் படைக்கலமும் தம்முள் கூறுபாடுடையன என்க.
 

( 53 )


     (பாடம்) 1மனுசந்.